| ADDED : நவ 23, 2025 04:13 AM
பெங்களூரு: முதல்வர் பதவிக்காக, முட்டி மோதும் துணை முதல்வர் சிவகுமார், கடவுளிடம் முறையிட துவங்கியுள்ளார். பிரசித்தி பெற்ற ஜேனுகல் சித்தேஸ்வர சுவாமியின் பாதுகைக்கு, அவரது இல்லத்தில் சிறப்பு பூஜை நடந்தது. முதல்வர் பதவி விஷயத்தில், காங்கிரஸ் மேலிடம் தெளிவான முடிவு எடுக்க முடியாமல் திண்டாடுகிறது. இருதலைக்கொல்லி எறும்பாக பரிதவிக்கிறது. இதுவரை பொறுமையாக இருந்த துணை முதல்வர் சிவகுமார், தனக்கு முதல்வர் பதவி கொடுத்தே ஆக வேண்டும் என, உறுதியாக நிற்கிறார். பதவி வேண்டி கோவில், கோவிலாக தரிசனம் செய்கிறார். கர்நாடகா மட்டுமின்றி, வெளி மாநிலங்களின் பிரசித்தி பெற்ற கோவிலுக்கும் சென்று, சிறப்பு பூஜைகள் செய்தார். ஹாசனின் புராதண பிரசித்தி பெற்ற ஜேனுகல் சித்தேஸ்வரர் சுவாமி பாதுகைக்கு, பெங்களூரின் சதாசிவ நகரில் உள்ள சிவகுமாரின் இல்லத்தில், நேற்று முன் தினம் இரவு பூஜை நடந்தது. ஐந்து அர்ச்சகர்கள் ஒரு மணி நேரத்துகும் மேலாக பூஜை நடத்தினர். இந்த பூஜையில், யோகேஸ்வர், பிரகாஷ் கோலிவாட், முன்னாள் எம்.பி., சுரேஷ் உட்பட, பலர் பங்கேற்றனர். இதற்கு முன்பு எடியூரப்பா, ஜேனுகல் சித்தேஸ்வரர் சுவாமியின் பாதுகைக்கு சிறப்பு பூஜைகள் செய்தார். அதன் பின்னரே அவருக்கு முதல்வர் பதவி கிடைத்தது. எனவே இவரது வழியை சிவகுமாரும் பின்பற்றுவதாக, பா.ஜ., வட்டாரத்தில் பேச்சு எழுந்துள்ளது. துணை முதல்வர் வீட்டில் சிறப்பு பூஜை நடத்தப்பட்ட தகவல் பரவியதை அடுத்து, முதல்வரின் ஆதரவாளர்கள் வட்டாரத்தில் அதிர்ச்சி பரவியது.