மேலும் செய்திகள்
தர்மஸ்தலா வழக்கு 4 பேருக்கு சம்மன்
26-Oct-2025
தர்மஸ்தலா வழக்கு: நால்வர் 'டிமிக்கி'
28-Oct-2025
பெங்களூரு: 'தர்மஸ்தலா வழக்கில் பொய் சாட்சி அளிக்கும்படி என்னை மிரட்டுகின்றனர்' என்று, எஸ்.ஐ.டி., அதிகாரிகள் மீது, கவர்னர் தாவர்சந்த் கெலாட்டிற்கு கடிதம் மூலம், சமூக ஆர்வலர் ஜெயந்த் புகார் அளித்து உள்ளார். தட்சிண கன்னடாவின் தர்மஸ்தலாவில் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட நுாற்றுக்கும் மேற்பட்ட பெண்களின் உடல்கள் புதைக்கப்பட்டதாக, சின்னையா என்பவர் அளித்த புகாரில், எஸ்.ஐ.டி., எனும் சிறப்பு புலனாய்வு குழுவை அரசு அமைத்தது. சின்னையா அடையாளம் காட்டிய 20 இடங்களில் பள்ளம் தோண்டியும் எலும்பு கூடுகள், மண்டை ஓடுகள் கிடைக்கவில்லை. பொய் புகார் அளித்த சின்னையா கைது செய்யப்பட்டார். இவரை துாண்டி விட்டதாக, பெல்தங்கடியில் வசிக்கும் ராஷ்ட்ரீய ஹிந்து ஜாக்ரன வேதிகே தலைவர் மகேஷ் திம்மரோடி, சமூக ஆர்வலர்கள் ஜெயந்த், கிரிஷ் மட்டன்னவரிடம், எஸ்.ஐ.டி., அதிகாரிகள் விசாரணை நடத்தினர். தொல்லை இந்நிலையில் கவர்னர் தாவர்சந்த் கெலாட், டி.ஜி.பி., சலீம் ஆகியோருக்கு சமூக ஆர்வலர் ஜெயந்த் எழுதியுள்ள கடிதம்: தர்மஸ்தலா வழக்கில் எஸ்.ஐ.டி., அதிகாரிகள் முன்பு, விசாரணைக்கு ஆஜரான போது என்னையும், சின்னையாவையும், குழுவில் உள்ள ஐ.பி.எஸ்., அதிகாரி ஜிதேந்திர குமார் தயமா, எஸ்.பி., சைமன், இன்ஸ்பெக்டர்கள் மஞ்சுநாத் கவுடா, மஞ்சுநாத், குணபால் ஆகியோர் தாக்கினர். தர்மஸ்தலா வழக்கில் பொய்யான வாக்குமூலம் அளிக்கும்படியும், அப்படி செய்யாவிட்டால் கொன்று விடுவதாகவும் மிரட்டினர். விசாரணையின் போது எனக்கு குடிக்க தண்ணீர் கூட கொடுக்கவில்லை. சட்டவிரோதமாக காவலில் வைத்து தாக்கினர். மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் தொல்லை கொடுத்தனர். என் மனைவி, மகளையும் விசாரணைக்கு அழைத்தனர். பொறுப்பு நான் கூறியது போன்று, அவர்களே வாக்குமூலத்தை தயார் செய்தனர். விசாரணை என்ற பெயரில் என்னை துன்புறுத்திய, எஸ்.ஐ.டி., அதிகாரிகள் மீது பிரிவு 35 ன் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். எதிர்காலத்தில் எனக்கோ, எனது குடும்பத்திற்கோ ஏதாவது நடந்தால் அதற்கு, எஸ்.ஐ.டி., அதிகாரிகள் தான் பொறுப்பு. இந்த கடிதத்தில் குறிப்பிட்டு உள்ளதை, மரணத்திற்கு முந்தைய அறிக்கையாக கருத வேண்டும். எஸ்.ஐ.டி., அதிகாரிகள் மீது இந்திய சிவில் சட்டம் பிரிவு 115, 118(1), 126, 127, 131, 232, 351, 61(2) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு தொடர அனுமதி வழங்கும்படி கேட்டு கொள்கிறேன். இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டு உள்ளது. தர்மஸ்தலாவில் பெண்கள் உடல்கள் புதைக்கப்பட்ட தகவல் வெளியானதும், உண்மையை வெளி கொண்டு வர எஸ்.ஐ.டி., அமைக்க வேண்டும் என்று அரசுக்கு அழுத்தம் கொடுத்ததே, ஜெயந்த் மற்றும் அவரது குழுவினர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
26-Oct-2025
28-Oct-2025