ஹெச்.எம்.டி., நிறுவன வழக்கில் மனு அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை
பெங்களூரு: ''ஹெச்.எம்.டி., நிறுவன வழக்கில், அரசு அனுமதியின்றி மனுத் தாக்கல் செய்த இரண்டு ஐ.எப்.எஸ்., அதிகாரிகள், இரண்டு ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, வனத்துறை அமைச்சர் ஈஸ்வர் கன்ட்ரே கூறி உள்ளார்.பெங்களூரில் அவர் நேற்று அளித்த பேட்டி:ஹெச்.எம்.டி., எனும் ஹிந்துஸ்தான் மெஷின் டூல்ஸ் நிறுவனம், சட்டவிரோதமாக 500 கோடி ரூபாய்க்கும் மேல் மதிப்புள்ள வனப்பகுதியை பயன்படுத்தி வருகிறது.இது தொடர்பான வழக்கில் அமைச்சரவை ஒப்புதல் இல்லாமல், உச்ச நீதிமன்றத்தில் இடைக்கால மனுத் தாக்கல் செய்த ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் இருவர், பணியில் உள்ள இரண்டு ஐ.எப்.எஸ்., அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.இதுகுறித்து முதல்வர் சித்தராமையாவுக்கு தெரிவிக்கப்பட்டு உள்ளது. இவ்வழக்கில் வனத்துறை கூடுதல் தலைமை செயலர் கோகுல் தவறான தகவல்களை பரப்பி வருகிறார். அவர் சி.பி.ஐ.,க்கும் கடிதம் எழுதி உள்ளார்.கடிதத்தில், நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட நிலம், வன அந்தஸ்தை இழந்துவிட்டதாக கூறி உள்ளார். இது அப்பட்டமான பொய். அந்த இடத்தில் இன்னும் 180 ஏக்கர் வனம் பாதுகாப்பாக உள்ளது. எனவே, அவரை இடைநீக்கம் செய்து விசாரிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.