சுரங்கப்பாதை திட்டம் ஜன., 1ல் துவக்கம்? எதிர்த்து பா.ஜ., கையெழுத்து இயக்கம்
பெங்களூரு: பெங்களூரு சுரங்கப்பாதை திட்டத்துக்கு அடிக்கல் நாட்டு விழா வரும் ஜனவரி 1ம் தேதி நடக்க உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. பெங்களூரில் போக்குரவத்து நெரிசலை குறைக்க ஹெப்பால் - சில்க் போர்டு இடையே சுரங்கப்பாதை அமைக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது. சுரங்கப்பாதை அமைக்க 18 ஆயிரம் கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டது. இந்த சாலை அமைப்பதால் நகரின் லால்பாக், சாங்கி ஏரி உள்ளிட்ட பல பகுதிகளுக்கு பாதிப்பு ஏற்படும் என, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதை முன்னிறுத்தி பா.ஜ.,வும் போராட்டம் நடத்தி வருகிறது. சுரங்கப்பாதை திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று சாங்கி ஏரி அருகே மாநில பா.ஜ., சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதில், எதிர்க்கட்சித் தலைவர் அசோக், மத்திய சிறு, குறு தொழில் இணை அமைச்சர் ஷோபா, மல்லேஸ்வரம் பா.ஜ.,- எம்.எல்.ஏ., அஸ்வத் நாராயணன் மற்றும் பலர் பங்கேற்றனர். இதைத் தொடர்ந்து திட்டத்துக்கு எதிராக கையெழுத்து வாங்கும் இயக்கத்தையும் பா.ஜ., துவக்கியது. இது ஒரு புறம் இருக்க, 'சுரங்கப்பாதையை எப்படியாவது அமைத்தே தீருவேன்' என, துணை முதல்வர் சிவகுமார் அடம்பிடித்து வருகிறார். இதற்காக, அவர் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி ஆகியோர் சுரங்கப்பாதை திட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து வருவதாக கூறி வருகிறார்.இதை பா.ஜ.,வினர் மறுத்து வருகின்றனர். இதற்கிடையே சுரங்கப்பாதை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழாவை வரும் ஜனவரி 1ம் தேதி ஆங்கில புத்தாண்டு தினத்தில் மாநில அரசு நடத்த இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. சுரங்கப்பாதை அமைக்கும் பணிகள் வரும் ஜனவரி அல்லது பிப்ரவரி இறுதிக்குகள் துவங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.