| ADDED : செப் 11, 2026 02:48 AM
மைசூரு: தசராவுக்கு வந்துள்ள யானைகளின் பாகன்கள், உதவியாளர்கள் குழந்தைகளுக்கு, அரண்மனை வளாகத்தில் தற்காலிக பள்ளி அமைக்கப்பட்டு உள்ளது. மைசூரு தசராவில் பங்கேற்க வந்துள்ள யானைகளின் பாகன்கள், உதவியாளர்கள் குடும்பத்தில், அடுத்த 50 நாட்களுக்கு இங்கு தான் தங்க உள்ளனர். இந்த நேரத்தில் அவர்களின் பிள்ளைகளின் கல்விக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், யானைகள் ஓய்வு பகுதி அருகில் கட்டடத்தில் தற்காலிக பள்ளியை துவக்கப்பட்டு உள்ளது. இங்கு ஒன்றாம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளுக்கு பாடம் சொல்லித்தர, கல்வி துறை முடிவு செய்துள்ளது. தற்போது இங்கு, 20 குழந்தைகள் படிக்கின்றனர். குழந்தைகளுக்கு பாடத்துடன், மற்ற நடவடிக்கைகளும் சொல்லித்தரப்படுகின்றன. தினமும் ஓவியம் வரைதல், பாட்டு போட்டி, விளையாட்டு போட்டிகளை ஆசிரியர்கள் கற்பிக்கின்றனர். குழந்தைகளுக்கு பாடம் சொல்லித்தரும் ஆசிரியை கீதா கூறுகையில், ''தசரா பண்டிகைக்கு வந்துள்ள இக்குழந்தைகள், ஒன்றரை மாதம் இங்கு தங்கியிருப்பர். இந்த நேரத்தில், அவர்களின் கற்றலுக்கு இடையூறு ஏற்படாத வகையில், ஒரு தற்காலிக பள்ளி துவங்கப்பட்டு உள்ளது,'' என்றார்.