சுகாஸ் கொலையில் கைதான நபர்களுக்கு பி.எப்.ஐ., உடன் தொடர்பு
மங்களூரு: பஜ்ரங் தள் தொண்டர் சுகாஸ் ஷெட்டி கொலை வழக்கில் கைதானவர்களுக்கு, தடை செய்யப்பட்ட பி.எப்.ஐ., அமைப்புடன் தொடர்பு இருப்பதை என்.ஐ.ஏ., அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.தட்சிண கன்னடா பன்ட்வாலை சேர்ந்தவர் சுகாஸ் ஷெட்டி. பஜ்ரங் தள் தொண்டரான இவர், கடந்த மே 1ம் தேதி இரவு மங்களூரு கின்னிபதவு பகுதியில் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் 12 பேரை பஜ்பே போலீசார் கைது செய்தனர்.கொலை வழக்கை என்.ஐ.ஏ., விசாரணைக்கு, மத்திய உள்துறை இம்மாதம் 9ம் தேதி ஒப்படைத்தது. மங்களூரு சிறையில் இருந்த 12 பேரையும், என்.ஐ.ஏ., அதிகாரிகள் தங்கள் காவலில் எடுத்துள்ளனர். டி.எஸ்.பி., பவன்குமார் தலைமையில் விசாரணை நடத்தப்படுகிறது.இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர்களில் 7 பேருக்கு, மத்திய அரசால் தடை செய்யப்பட்ட பி.எப்.ஐ., அமைப்புடன் தொடர்பு இருப்பதும், வெளிநாடுகளில் இருந்து பணம் வந்ததும் தெரிய வந்தது. இதனால் 7 பேரின் வங்கிக்கணக்கு விபரங்களை ஆய்வு செய்ய, அதிகாரிகள் தயாராகி வருகின்றனர்.வழக்கில் தொடர்புடைய சிலர் வெளிநாடுகளில் பதுங்கி இருப்பதாகவும் கூறப்படுகிறது. அவர்களையும் கைது செய்ய என்.ஐ.ஏ., தீவிரம் காட்டுவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.