உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / பா.ஜ.,வில் சேருமாறு 55 எம்.எல்.ஏ.,க்களுக்கு மிரட்டல்? ... : காங்., மூத்த தலைவர் விஜயானந்த் குற்றச்சாட்டு

பா.ஜ.,வில் சேருமாறு 55 எம்.எல்.ஏ.,க்களுக்கு மிரட்டல்? ... : காங்., மூத்த தலைவர் விஜயானந்த் குற்றச்சாட்டு

பாகல்கோட்: சட்டவிரோதமாக சொத்து சேர்த்ததாக, உங்கள் வீடுகளில் 'ரெய்டு' நடத்துவோம் என கூறி, பா.ஜ.,வில் சேருமாறு காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் 55 பேருக்கு மிரட்டல் விடுக்கப்படுவதாக, காங்கிரஸ் மூத்த தலைவரான ஹுன்குந்த் எம்.எல்.ஏ., விஜயானந்த் காசப்பனவர் பகீர் தகவல் கூறி உள்ளார்.'ரெய்டு' நடத்துவோம் என அச்சுறுத்துவதாக 'திடுக்' கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையில், காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. ஆளுங்கட்சி, சுயேச்சைகள் என அரசுக்கு 140 எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு உள்ளது. இந்நிலையில், முதல்வர் பதவிக்காக சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார் இடையில் ஏற்பட்டு உள்ள மோதலால், அரசு தானாக கவிழ்ந்து விடும் என்று பிரதான எதிர்க்கட்சியான பா.ஜ., தலைவர்கள் தொடர்ந்து கூறி வருகின்றனர். அக்டோபர் அல்லது நவம்பரில் ஆட்சி கவிழும் என்று ஆரூடம் சொல்கின்றனர்.

கவிழ்க்க முயற்சி

இந்நிலையில் கர்நாடக காங்கிரஸ் மூத்த தலைவரும், பாகல்கோட்டின் ஹுன்குந்த் காங்கிரஸ் எம்.எல்.ஏ.,வுமான விஜயானந்த் காசப்பனவர், ஹுன்குந்த்தில் நேற்று அளித்த பேட்டி:கர்நாடகாவில் பா.ஜ.,வால் தனிப் பெரும்பான்மையுடன், ஆட்சிக்கு வர முடியாது. பின்வாசல் வழியாக தான் ஆட்சியை பிடிக்கின்றனர். 'ஆப்பரேஷன் தாமரை' மூலம் காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்களை அழைத்து சென்று, கடந்த முறை ஆட்சியை பிடித்தனர். எங்களிடம் தற்போது, 140 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். ஆனாலும் அரசை கவிழ்க்க, பா.ஜ., தலைவர்கள் தொடர்ந்து முயற்சித்து வருகின்றனர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் 55 பேரின் பெயர்களை, பா.ஜ., தலைவர்கள் பட்டியல் போட்டு வைத்து உள்ளனர். தங்கள் ஏஜென்டுகளை, எம்.எல்.ஏ.,க்கள் வீடுகளுக்கு அனுப்பி, காங்கிரசில் இருந்து விலகி பா.ஜ.,வில் இணையும்படி பேரம் பேசுகின்றனர். இதற்கு மறுக்கும் எம்.எல்.ஏ.,க்களிடம், சட்டவிரோதமாக நீங்கள் சொத்து சேர்த்து வைத்திருப்பதாக கூறி, உங்கள் வீடுகளில் அமலாக்கத்துறை, சி.பி.ஐ., மற்றும் வருமான வரி துறை மூலம் சோதனை நடத்துவோம் என்று மிரட்டுகின்றனர்.

என் பெயர்

பல்லாரி மாவட்ட எம்.எல்.ஏ.,க்கள் பரத் ரெட்டி, நாகேந்திரா, பல்லாரி காங்கிரஸ் எம்.பி., துக்காராம் வீடுகளில், சமீபத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. பாகேபள்ளி எம்.எல்.ஏ., சுப்பாரெட்டி வீட்டிலும் சோதனை நடத்தி உள்ளனர். இதனை பார்த்து எங்கள் எம்.எல்.ஏ.,க்கள் பயத்தில் இருக்கின்றனர். பா.ஜ., தயாரித்து உள்ள பட்டியலில், எனது பெயர் கூட இருக்கலாம். நான் எந்த சோதனைக்கும் பயப்பட போவது இல்லை. பா.ஜ., செய்யும் அரசியலை மக்கள் பார்க்கின்றனர். அடுத்த தேர்தலில் அவர்கள் என்ன முகத்தை வைத்துக் கொண்டு, ஓட்டு கேட்க செல்வர் என்று நாங்கள் பார்க்க தான் போகிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.

பாவ குடம்

இந்த குற்றச்சாட்டுக்கு பதிலளித்து, மேல்சபை எதிர்க்கட்சி தலைவர் சலவாதி நாராயணசாமி வெளியிட்ட அறிக்கை:எம்.எல்.ஏ., விஜயானந்த் காசப்பனவர் தான் கூறிய குற்றச்சாட்டுக்கு, ஆதாரம் இருந்தால் கொடுக்கட்டும். காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் எங்களுக்கு வேண்டவே வேண்டாம். அவர்களை இழுத்து ஆட்சி அமைக்க, நாங்கள் முயற்சி செய்யவில்லை. ரமேஷ் ஜார்கிஹோளி உட்பட 17 பேர் தாங்களாகவே, பா.ஜ.,வில் சேர்ந்தனர்.இப்போது தேர்தல் நடந்தால் கூட, பா.ஜ., 150 இடங்களில் வெற்றி பெறும். விஜயானந்த் காசப்பனவர் கூறியது பெரிய பொய். காங்கிரசின் பாவ குடம் நிரம்பி உள்ளது.வளர்ச்சி பணிகள் நடக்கவில்லை. விலைவாசி உயர்வு என்ற பெயரில், மக்களை மிரட்டி பணம் பறிக்கின்றனர். சித்தராமையா, சிவகுமார் இடையில் ஏற்பட்ட அதிகார மோதலை திசை திருப்ப, விஜயானந்த் அர்த்தமற்ற பொய் கூறுகிறார். காங்கிரஸ் நாடக கம்பெனி. நான் அந்த கட்சியில் இருந்து பா.ஜ.,வுக்கு வந்து உள்ளேன். அவர்கள் நடத்தும் நாடகம் எனக்கு நன்கு தெரியும். வால்மீகி மேம்பாட்டு ஆணையத்தில் முறைகேடு நடந்ததால் பரத் ரெட்டி, துக்காராம் வீடுகளில், அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.வெளிநாடுகளில் முதலீடு செய்ததாக கிடைத்த தகவலின் அடிப்படையில், சுப்பாரெட்டி வீட்டில் சோதனை நடந்து உள்ளது. பாகேபள்ளியில் அவர் பெயரில் 3,000 ஏக்கர் நிலம் உள்ளது. மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போது தான், விசாரணை அமைப்புகள் உருவாக்கப்பட்டன. இப்போது அவர்கள் விசாரணை அமைப்புகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். காங்கிரஸ் அரசு கோமாவில் உள்ளது.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.'காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் 50 பேரை இழுக்க, தலா 100 கோடி ரூபாய் பா.ஜ., பேரம் பேசுகிறது' என்று, மாண்டியா காங்கிரஸ் எம்.எல்.ஏ., ரவிகுமார் கனிகா கடந்த ஆண்டு கூறியது குறிப்பிடத்தக்கது.அமைச்சர் பதவிஐந்து வருடம் நானே முதல்வர் என்று, சித்தராமையா கூறுவதில் எந்த தவறும் இல்லை. மாற்றம் வேண்டும் என்றால் மேலிடம் முடிவு எடுக்கும். எம்.எல்.ஏ.,க்கள் தங்கள் கருத்துகளை தெரிவிக்கின்றனர். இதில் தவறு இல்லை. என் அப்பா, அம்மா காங்கிரசில் எம்.எல்.ஏ.,வாக இருந்து உள்ளனர். நானும் இரண்டு முறை எம்.எல்.ஏ.,வாக இருந்து உள்ளேன். எனக்கும் அமைச்சர் பதவி வேண்டும். பதவி கிடைத்தால் திறம்பட நிர்வகிப்பேன் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.- விஜயானந்த் காசப்பனவர், எம்.எல்.ஏ., ஹுன்குந்த்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி