வயாலிகாவல்: பெங்களூரு வயாலிகாவலில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா சுவாமி கோவிலில், வைகுண்ட ஏகாதசி தினமான, 30ம் தேதி அதிகாலை, 1:35 முதல் அன்று இரவு, 11:45 மணி வரை, பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. பெங்களூரு மல்லேஸ்வரம் வயாலிகாவலில் உள்ள டி.டி.டி., எனும், திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா சுவாமி கோவிலில், நேற்று செய்தியாளர்கள் சந்திப்பு நடந்தது. திருப்பதி திருமலை தேவஸ்தான வாரிய உறுப்பினர் நரேஷ் குமார், பெங்களூரு டி.டி.டி., ஆலோசனை குழு தலைவர் வீரஆஞ்சநேயலு, பெங்களூரு கண்காணிப்பாளர் ஜெயந்தி ஆகியோர் பங்கேற்றனர். அவர்கள் கூறியதாவது: வைகுண்ட ஏகாதசி அன்று பக்தர்களுக்கு தடையில்லா தரிசனம் வழங்குவதற்கான, அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளன. 30ம் தேதி அதிகாலை, 1:35 மணி முதல் அன்று இரவு 11:45 மணி வரை தொடர்ச்சியாக பக்தர்கள் தரிசனம் செய்யலாம். தடையின்றி அன்னதானம், குடிநீர் வழங்கப்படும். பஜனை, இசை கச்சேரிகளும் நடத்தப்படும். அதிகாலை, 2:00 மணிக்கு லட்டு விற்பனை துவங்கும். ஒரு லட்டு விலை, 50 ரூபாய். காலண்டர், டைரி விற்பனையும் நடைபெறும். இந்த ஆண்டு, 70,000 பக்தர்கள் வருகை தருவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விரைவு தரிசனத்திற்கு, 200 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் பிரத்யேக வழியில் சாமி தரிசனம் செய்யலாம். வாகனங்களை பார்க்கிங் செய்ய வியாலிகாவல் மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.