தர்மஸ்தலாவில் வேறு இடத்தில் பள்ளம் தோண்டியது ஏன்? யு - டியூபர்கள் மீது தாக்குதலால் திடீர் பதற்றம், தடியடி
மங்களூரு: தர்மஸ்தலா மஞ்சுநாதா கோவில் நிர்வாகத்தை பற்றி அவதுாறாக கூறிய மூன்று யு - டியூபர்களை உள்ளூர்வாசிகள் கடுமையாக தாக்கியதால் பரபரப்பு நிலவியது. போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தினரை கலைத்தனர். தட்சிண கன்னடாவின் தர்மஸ்தலாவில், கொலை செய்யப்பட்ட நுாற்றுக்கும் மேற்பட்ட பெண்களின் உடல்களை புதைத்தாக மஞ்சுநாதா கோவிலின் முன்னாள் ஊழியர் புகார் அளித்திருந்தார். சிறப்பு புலனாய்வு பிரிவான எஸ்.ஐ.டி., அதிகாரிகளிடம் 13 இடங்களை அடையாளம் காண்பித்தார். கடந்த மாதம் 29ம் தேதி முதல் இந்த இடங்களில் தோண்டும் பணிகள் நடக்கின்றன. நேற்று முன்தினம் வரை 12 இடங்கள் தோண்டப்பட்டன. இதில் இரண்டு இடங்களில் மட்டுமே எலும்புகள் கிடைத்தன. குழப்பம் நேற்று நேத்ராவதி குளியல் பகுதிக்கு செல்லும் சாலைக்கு அருகில் உள்ள 13வது இடத்தை தோண்ட பலத்த பாதுகாப்புடன் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. சாலை மூடப்பட்டதால், ஆள் நடமாட்டம் இல்லாமல் இருந்தது. போலீசார் மட்டுமே கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். நேற்று எஸ்.ஐ.டி., குழுவினர் 13வது இடத்தில் தோண்டுவதற்கு பதிலாக, பங்காள பேட்டை காட்டுக்குள் உள்ள வேறு இடத்திற்கு சென்றனர். இது குழப்பத்தை ஏற்படுத்தியது. எஸ்.ஐ.டி., அதிகாரிகள் உட்பட 80க்கும் மேற்பட்டோர் பணியில் ஈடுபட்டனர். இது பற்றி விசாரித்த போது, 'அடையாளம் காண்பித்த இடத்தில் மட்டும் தோண்டுவது, சிலருக்கு சாதகமாக அமையும்; இதை தவிர்க்கவே வேறு இடத்திலும் தோண்ட முடிவு செய்யப்பட்டது' என தெரிவித்தனர். ஏற்கனவே எலும்புகள் கிடைத்த 11வது இடத்தில் இருந்து 100 மீட்டர் தொலை வில் உள்ள பகுதியிலேயே நேற்று பள்ளம் தோண்டினர். இந்த இடத்தை '11- ஏ' என குறிப்பிட்டு உள்ளனர். '11 - ஏ'வில் தீவிரமாக தோண்டும் பணியில் ஈடுபட்டனர். வழக்கமாக உணவு இடைவேளைக்கு செல்லும் அதிகாரிகள், நேற்று செல்லவில்லை. சில அதிகாரிகள் உணவை எடுத்துச் சென்று, காட்டுக்குள் வைத்தே சாப்பிட்டனர். அந்த அளவுக்கு தீவிரமாக செயல்பட்டனர். மாலை வரை அதே இடத்திலே சோதனை நடத்தினர். எலும்புகள் எதுவும் கிடைத்ததாக தெரியவில்லை. இன்று 13வது இடத்தில் பள்ளம் தோண்ட உள்ளனர். இந்த இடத்தில் மின்சார கம்பம் உள்ளதால், ஜி.பி.ஆர்., எனும் நிலத்துக்குள் இருக்கும் பொருட்களை கண்டறியும் ரேடாரை பயன்படுத்துவது பாதுகாப்பானதா என்பது குறித்து நிபுணர்களின் கருத்தை எஸ்.ஐ.டி., குழுவின் தலைமை அதிகாரி பிரணாப் மொஹந்தி கேட்டுள்ளார். சிறுமி ஒருவர் புதைக்கப்பட்டதாக சமூக ஆர்வலர் ஜெயந்த் அளித்த புகாரையும் எஸ்.ஐ.டி., விசாரிக்கிறது. உடல் புதைக்கப்பட்ட இடத்தை அடையாளம் காட்டுமாறும் அவரிடம் கூறப்பட்டுள்ளது. தடியடி இதனிடையே, நேற்று மாலை நேத்ராவதி ஆற்றின் அருகே உள்ள பங்களா கிராஸ் அருகே யு - டியூபர்கள் அஜய், அபிஷேக், சந்தோஷ் ஆகிய மூவர், தர்மஸ்தலாவில் கொலை செய்யப்பட்ட சவுஜன்யாவின் மரணம் குறித்து வீடியோ பதிவு செய்து கொண்டிருந்தனர். அப்போது, தர்மஸ்தலா கோவில் நிர்வாகத்துக்கு கொலையில் சம்பந்தம் உள்ளதாக அவர்கள் கூறியதால், உள்ளூர்வாசிகள் அவர்களை தாக்கினர். இதில், மூன்று யு டியூபர்களுக்கும் காயம் ஏற்பட்டது. அவர்களின் உடைகள் கிழிக்கப்பட்டன. கார் கண்ணாடி உடைக்கப்பட்டது. உ ள்ளூர்வாசிகளுக்கும், யு - டியூபர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, கூட்டத்தினரை கலைக்க லேசாக தடியடி நடத்தினர். காயமடைந்த மூவரும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதனால், நேற்று இரவு வரை தர்மஸ்தலாவில் பதற்றம் நிலவியது. பெல்தங்கடி போலீசார், ரோந்து பணியில் ஈடுபட்டனர்.