கணவரை கொன்று புலி இழுத்து சென்றதாக நாடகமாடிய மனைவி
மைசூரு:பெங்களூரு தெற்கு மாவட்டம், பிடதியை சேர்ந்தவர் வெங்கடசாமி, 45. இவரது மனைவி சாலாபுரி, 40. இருவருக்கும் இரு பிள்ளைகள் உள்ளனர். பிடதியில் உறவினர் வீட்டில் தங்கி படித்து வருகின்றனர். தம்பதி, மைசூரு - குடகு மாவட்ட எல்லையான வீரனஹொசஹள்ளி அருகில் உள்ள சிக்கஹாஜ்ஜுருவில் உள்ள தனியாருக்கு சொந்தமான 4.10 ஏக்கர் பாக்கு பண்ணையை கவனித்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த 9ம் தேதி, ஹூன்சூர் போலீசில் சாலாபுரி ஒரு புகார் அளித்தார். அதில், 'நாங்கள் இருவரும் வீட்டில் உணவு சாப்பிட்டு கொண்டிருக்கும் போது, புலியின் சத்தம் கேட்டது. இதை கேட்ட என் கணவர் வெளியே சென்றவர், திரும்பி வரவில்லை' என்று குறிப்பிட்டிருந்தார். வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தினர். ஆனால், புலி இழுத்து சென்ற திசையில் அதன் கால் தடமும், இழுத்து சென்றதற்கான தடயமும் கிடைக்காதது, போலீசாருக்கு சந்தேகத்தை வரவழைத்தது. மனைவி சாலாபுரியிடம் போலீசார் விசாரித்த போது, கணவரை கொன்றதை ஒப்புக் கொண்டார். விசாரணையில், 'சாலாபுரிக்கு ஆடம்பரமாக வாழ வேண்டும் என்று ஆசை. இது தொடர்பாக தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. அதேவேளையில், தாலுகா பஞ்சாயத்து, கிராம பஞ்சாயத்துகளுக்கு சென்று, அரசின் திட்டங்கள் குறிப்பாக, நிவாரண திட்டங்கள் குறித்து விசாரித்து உள்ளார். அப்போது, வன விலங்கு தாக்குதலில் பலியானால், அவர்களின் குடும்பத்துக்கு 15 லட்சம் ரூபாய் நிவாரணம் கிடைக்கும் என்ற தகவல் தெரிந்தது. இதற்காகவே கணவரை அடித்து கொன்றதை ஒப்புக் கொண்டார். அவரை கைது செய்த போலீசார் விசாரித்து வருகின்றனர். கணவரது உடலை தேடி வருகின்றனர்.