உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / மீண்டும் பா.ஜ.,வில் லட்சுமண் சவதி?

மீண்டும் பா.ஜ.,வில் லட்சுமண் சவதி?

கர்நாடக அரசியலில் பெலகாவிக்கு என்று முக்கிய இடம் உண்டு. ரமேஷ், சதீஷ், பாலசந்திரா, லகன் ஆகிய நான்கு ஜார்கிஹோளி சகோதரர்கள் அரசியலில் கோலோச்சுகின்றனர். மாநிலத்தில் எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும், ஜார்கிஹோளி சகோதரர்களில் யாராவது ஒருவர் அமைச்சராக இருப்பார். தற்போது ரமேஷ், பாலசந்திரா பா.ஜ.,விலும்; சதீஷ் காங்கிரஸ் அமைச்சராகவும்; லகன் சுயேச்சை எம்.எல்.சி.,யாகவும் உள்ளனர். வெவ்வேறு கட்சிகளில் இருந்து அரசியல் ரீதியாக சண்டை போட்டுக் கொண்டாலும், பெலகாவி அரசியல் என்று வரும்போது சகோதரர்கள் ஒற்றுமையாகி விடுவர். இதனால் அசைக்க முடியாத சக்தியாக உள்ளனர். பெலகாவியில் அரசியல்ரீதியாக எந்த தலைவர்களையும், சகோதரர்கள் வளரவும் விடுவது இல்லை. அரசியல் எதிரி நிலைமை இப்படி இருக்கும்போது, பா.ஜ.,வில் துணை முதல்வர், அமைச்சராக பதவிகளை வகித்த லட்சுமண் சவதி, 2023 சட்டசபை தேர்தலில் அதானி தொகுதியில் போட்டியிட சீட் கிடைக்கவில்லை என்பதால், கோபத்தில் எம்.எல்.சி., பதவியை ராஜினாமா செய்துவிட்டு, காங்கிரசில் இணைந்தார். அதானி தொகுதியில் வெற்றியும் பெற்றார். பா.ஜ.,வில் துணை முதல்வராக இருந்ததால், காங்கிரசில் தனக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என்று நினைத்தார். ஆனால், அவருக்கு பதவி கிடைக்க, அரசியல் எதிரியான சதீஷ் ஜார்கிஹோளி விடவில்லை. தனக்கென இடம் கட்சியில் ஏதாவது உயர்ந்த பதவியை பெறலாம் அல்லது பணம் கொட்டும் வாரிய தலைவர் பதவியையாவது கைப்பற்றலாம் என்றெல்லாம், லட்சுமண் சவதி நினைத்திருந்தார். எதுவும் கைகூடவில்லை. பெலகாவியில், ஜார்கிஹோளி சகோதரர்களை எதிர்த்து அரசியல் செய்ய தான், அவரை காங்கிரசுக்கு துணை முதல்வர் சிவகுமார் அழைத்து வந்திருந்தார். கட்சிக்கு வந்த புதிதில் ஏதாவது செய்து, பெலகாவி மாவட்டத்தில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து விடலாம் என்று எவ்வளவோ முயன்றார். ஆனால், ஜார்கிஹோளி சகோத ரர்கள் முன், அவரால் தாக்குப் பிடிக்க முடியவில்லை. கடந்த மாதம் நடந்த, பெலகாவி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில், பா.ஜ., முன்னாள் எம்.பி., ரமேஷ் கட்டியுடன் கைகோர்த்து, ஜார்கிஹோளி சகோதரர்களின் ஆதரவு வேட்பாளர்களுக்கு எதிராக பிரசாரம் செய்தார் லட்சுமண் சவதி. இதிலும் அவருக்கு தோல்வி தான் கிடைத்தது. அமைச்சர் பதவியும் கிடைக்கவில்லை; பெலகாவி அரசியலிலும் எதுவும் செய்ய முடியவில்லை என்று விரக்தியில் இருக்கும், லட்சுமண் சவதி மீண்டும் தாய் கட்சியான பா.ஜ.,வுக்கே சென்றுவிடலாமா என்ற யோசனையில் இருப்பதாக கூறப்படுகிறது. வரும் நாளில் விடை பா.ஜ.,வுடன் கைகோர்த்ததால், அதானி காங்கிரஸ் தலைவர்கள் சிலரும் லட்சுமண் சவதி மீது, அதிருப்தியில் உள்ளனர். அவர் பா.ஜ.,வுக்கு செல்ல முடிவு செய்துவிட்டார். டில்லியில் உள்ள பா.ஜ., தலைவர்களுடன் தொடர்பில் உள்ளார் என்றும் கூறி வருகின்றனர். ஆனால் லட்சுமண் சவதியோ எதுவும் பேசாமல் அமைதி காக்கிறார். லிங்காயத்தின் பஞ்சமசாலி சமூகத்தை சேர்ந்த அவரை, கட்சியில் தக்கவைக்க சிவகுமார் கண்டிப்பாக முயற்சி செய்வார். அமைச்சரவை மாற்றத்தின்போது, அமைச்சர் பதவி கிடைக்காவிட்டால் தாய் கட்சிக்கு, லட்சுமண் சவதி சென்றுவிடலாம் என்ற பேச்சும் மும்முரமாக அடிபடுகிறது. என்ன நடக்கும் என்பதற்கு வரும் நாட்களில் விடை கிடைக்கும். - நமது நிருபர் -:


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !