| ADDED : நவ 25, 2025 05:52 AM
சாம்ராஜ் நகர்: புலிகளில் தொல்லையால் பண்டிப்பூர், நாகரஹொளே வனப்பகுதியில் 'சபாரி' நிறுத்தப்பட்டிருப்பதால், நிதி இழப்பு ஏற்பட்டுள்ளது. இதை ஈடுகட்டும் வகையில் டிசம்பர் மாதத்தில் மீண்டும் சபாரி துவங்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. சாம்ராஜ் நகர், மைசூரு வனப்பகுதி ஓரங்களில் உணவு தேடி வரும் புலிகள், சிறுத்தைகள், கிராமப்பகுதிகளில் உள்ள கால்நடைகள், மனிதர்களை வேட்டையாடி வருகின்றன. கடந்த ஒன்றரை மாதங்களில் புலி தாக்கியதில், மூன்று விவசாயிகள் உயிரிழந்தனர்; ஒருவர் கண் பார்வையை இழந்தார். இதையடுத்து, வனத் துறை அமைச்சர் ஈஸ்வர் கன்ட்ரே, விவசாயிகள், துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பண்டிப்பூர் தேசிய பூங்கா, நாகரஹொளே புலிகள் வனப்பகுதியில் இயங்கி வந்த சுற்றுலா பயணியருக்கான, 'சபாரி' சேவையை மறு உத்தரவு வரும் வரை நிறுத்தி வைக்க உத்தரவிட்டார். இதற்கு விவசாயிகளும் வரவேற்பு அளித்தனர். ஆனால், இந்த தடை உத்தரவால், பண்டிப்பூர், நாகரஹொளே வனத்துறையினருக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டு உள்ளது. நாள் ஒன்றுக்கு 3 லட்சம் ரூபாயும், வார இறுதி நாட்களில் 15 லட்சம் ரூபாயும் வருவாய் இழப்பு ஏற்பட்டு உள்ளது. சுற்றுலா பயணியர் இன்றி இவ்விரண்டு இடங்களும் வெறிச்சோடி காணப்படுகின்றன. இது தவிர, சபாரியை நம்பியிருந்த பல குடும்பத்தினர், வருவாய் இன்றி தவிக்கின்றனர். எனவே, சபாரியை மீண்டும் துவங்கும்படி பல தரப்பில் இருந்தும், வனத்துறையினருக்கு அழுத்தம் வருகிறது. இது தொடர்பாக வனத்துறை அமைச்சர், மூத்த அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்ட உள்ளது. இதனால் டிசம்பர் மாதத்தில் மீண்டும் சபாரி துவங்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.