சித்தாபூரில் அக்., 2ல் ஊர்வலம் நடக்குமா? அமைதி கூட்டம் பாதியில் நிறுத்தம்
கலபுரகி: சித்தாபூரில் நவ., 2ல் ஊர்வலம் நடத்துவது தொடர்பாக மாவட்ட கலெக்டர் அழைத்திருந்த அமைதி கூட்டத்தில், தலித் பேந்தர்ஸ் அமைப்பின் கோரிக்கையை ஏற்க ஆர்.எஸ்.எஸ்., மறுத்ததால், கூட்டம் பாதியில் நிறுத்தப்பட்டது. கலபுரகி மாவட்டம், சித்தாபூரில் அக்., 19ல் ஊர்வலம் நடத்த ஆர்.எஸ்.எஸ்., அமைப்பும், பீம் ஆர்மியும் அனுமதி கோரியிருந்தது. இதற்கு தாசில்தார் மறுப்பு தெரிவித்தார். இதை எதிர்த்து கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ஆர்.எஸ்.எஸ்., முறையிட்டது. நீதிமன்றமும், தாசில்தார் உத்தரவை உறுதி செய்தது. இதையடுத்து, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த ஆர்.எஸ்.எஸ்., நவ., 2ல் ஊர்வலம் நடத்த அனுமதி கோரியது. இது தொடர்பாக அன்றைய தினம் ஊர்வலம் நடத்த அனுமதி கேட்டிருந்த பிற அமைப்புகளுடன், அக்., 28ல் அமைதி கூட்டம் நடத்தி, அக்., 30ல் அறிக்கை சமர்ப்பிக்கும்படி அரசுக்கு, நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன்படி, மாவட்ட கலெக்டர் பவுசியா தரனும் தலைமையில், நேற்று காலை அமைதி கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. நவ., 2ல் அனுமதி கேட்ட அமைப்புகளில் இருந்து தலா மூன்று பேர் மட்டுமே அனுமதி என்று நோட்டீசும் வழங்கப்பட்டிருந்தது. கூட்டத்தில், ஆர்.எஸ்.எஸ்., பீம் ஆர்மி, பாரதிய தலித் பேந்தர்ஸ், சலவாடி மஹாசபா ஒருங்கிணைப்பு அமைப்புகளை சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்றனர். கூட்டத்தில், 'நவ., 2ல் ஆர்.எஸ்.எஸ்., ஊர்வலம் நடத்தினால், கையில் குச்சி இல்லாமல் நடக்க வேண்டும்' என, பாரதிய தலித் பேந்தர்ஸ் அமைப்பினர் கோரிக்கை விடுத்தனர். இதை ஆர்.எஸ்.எஸ்., அமைப்பினர் ஏற்கவில்லை. இதுதொடர்பாக விவாதம் நடந்தும் முடிவு எடுக்கப்படாமல், கூட்டம் பாதியில் நிறுத்தப்பட்டது. கூட்டத்தில் பங்கேற்ற அமைப்பினர்களிடம் இருந்து எழுத்துப்பூர்வமாக ஆலோசனைகள் கேட்டு மாவட்ட நிர்வாகம் வாங்கிக் கொண்டது. இதுதொடர்பான அறிக்கை, நாளை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும். இதனால் ஆர்.எஸ்.எஸ்., ஊர்வலம் நடக்குமா என்பது அன்றைய தினம் தெரிய வரும். இதற்கிடையில், ஜெய்பீம் சேனை தலைவர் குண்டப்பா லோன்டோங்கர், தன் ஆதரவாளர்களுடன் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார். அவரை தடுத்த போலீசார், 'அமைதி கூட்டத்தில் உங்களின் அமைப்பு பெயர் இல்லை. 'எனவே, உள்ளே அனுமதிக்க முடியாது' என்றனர். இதனால் கோபமடைந்த அவர்கள், போலீசுக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.