பெங்களூரு: ' 'ஆண்டுதோறும் செப்டம்பர் 13ம் தேதி மகளிர் பணியாளர் தினமாக அறிவிக்கப்படும்,'' என்று, முதல்வர் சித்தராமையா தெரிவித்தார். கர்நாடகாவில் அரசு, தனியார் துறைகளில் பணியாற்றும், பெண் ஊழியர்களுக்கு மாதத்தில் ஒரு நாள் சம்பளத்துடன் கூடிய, மாதவிடாய் விடுமுறை வழங்க உள்ளதாக அரசு அறிவித்து உள்ளது. இதற்காக, முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமாருக்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில், பெங்களூரு விதான் சவுதா விருந்தினர் மண்டபத்தில், பெண் ஊழியர்கள் சங்கம் சார்பில் நேற்று நிகழ்ச்சி நடத்தப்பட்டது. முதல்வர் சித்தராமையா பேசியதாவது: அரசின் நிர்வாக இயந்திரத்தில், பெண் ஊழியர்கள் குறிப்பிடத்தக்க பங்களிப்பு கொடுக்கின்றனர். பெண் ஊழியர்கள் சங்கத்திற்காக பால்பவனில் இடம் வழங்குவது குறித்து, பெண்கள் நல அமைச்சர் லட்சுமி ஹெப்பால்கருடன் கலந்துரையாடி உள்ளேன். ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 13ம் தேதி, மகளிர் பணியாளர் தினமாக அறிவிக்கப்படும். ஆண்களுக்கு இணையா க அனைத்து துறைகளிலும் பெண்கள் சிறப்பாக செயல்படுகின்றனர். பாலின பாகுபாட்டை நீக்கவும், அனைவரையும் சமமாக நடத்தவும் நாங்கள் உறுதி பூண்டு உள்ளோம். நாம் சுதந்திரம் அடைந்த போது நாட்டில் எழுத்தறிவு விகிதம் 10 முதல் 12 சதவீதமாக இருந்தது. தற்போது, 78 சதவீதமாக உள்ளது. மூடநம்பிக்கைகளுக்கு எதிராக பெண்கள், குழந்தைகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பகுத்தறிவு, அறிவியல் அறிவை பெண்கள் வளர்த்தால் மட்டுமே ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்க முடியும். குழந்தைகள் மத்தியில் ஜாதியத்தை கற்பிக்க கூடாது. ஜாதி அமைப்பை ஒழிப்பது கல்வி மட்டுமே. இவ்வாறு அவர் பேசினார். துணை முதல்வர் சிவகுமார் பேசியதாவது: பெண்களுக்கு அதிகாரமளிக்கும் விஷயத்தில், நாங்கள் வலுவான அடித்தளத்தை அமைத்து உள்ளோம். அரசு துறைகளில் பணியாற்றும் பெண் ஊழியர்களுக்கும், எங்கள் வாக்குறுதி திட்டங்களின் பயன்கள் கிடைக்கின்றன. எந்த சூழ்நிலையிலும் பெண் ஊழியர்கள், ஜாதி சங்கத்தில் இருக்க கூடாது. இது எனது அறிவுரை. பெண்கள், ஆண்களை விட திறமையானவர்கள். கர்நாடகாவில் தலைமை செயலர், டி.ஜி.பி.,யாக பெண்கள் பணியாற்றுகின்றனர். பெங்களூரு நகரின் தெய்வமாக அன்னம்மா உள்ளார்; இந்த பூமியின் தெய்வமாக சாமுண்டீஸ்வரியை பார்க்கிறோம். இவ்வாறு அவர் பேசினார்.