கத்தியால் குத்தி தொழிலாளி கொலை
மாலூர்: வேலையை முடித்துக் கொண்டு வீட்டுக்கு சென்று கொண்டிருந்த தொழிலாளியை மர்ம நபர்கள் கத்தியால் குத்திக் கொன்றனர். கோலார், நரசாப்பூர் தொழிற்பேட்டையில் பணியாற்றி வந்தவர் அரனாப் முன்னா, 25. வங்கதேசத்தை சேர்ந்தவர். மாலுாரின் முத்தகதஹள்ளி என்ற கிராமத்தில் தங்கி இருந்தார். வேலையை முடித்துக் கொண்டு, நேற்று முன்தினம் இரவு 11:00 மணிக்கு, தான் தங்கியிருந்த கொட்டகைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, கொட்டகையின் முன் மர்ம நபர்கள் அவரை கத்தியால் குத்திவிட்டு தப்பினர். பலத்த காயங்களுடன் தன் நண்பர் ஒருவருக்கு முன்னா தகவல் கொடுத்துள்ளார். அவர், முன்னா வேலை செய்யும் தொழிற்சாலைக்கு தெரிவித்து ஆம்புலன்சை வரவழைத்துள்ளார். கோலார் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். கொலையை செய்தது யார்; கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.