UPDATED : நவ 26, 2026 12:00 AM | ADDED : நவ 25, 2026 10:31 PM
ஹூப்பள்ளி: அஞ்சலி அம்பிகேரா கொலை வழக்கில், குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து, ஹூப்பள்ளி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஹூப்பள்ளியின், வீராபுராவில் வசித்தவர் அஞ்சலி அம்பிகேரா, 20. இவரும் கிரிஷ், 26, என்பவரும் காதலித்தனர். இவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், விரிசல் ஏற்பட்டது. தன்னுடனான தொடர்பை துண்டித்து கொண்டதால், அஞ்சலி மீது கிரிஷ் கோபமடைந்தார். கடந்த 2024ன் மே 15ம் தேதியன்று, அதிகாலை அஞ்சலிவின் வீட்டுக்குள் புகுந்து, அவரது பாட்டி மற்றும் சகோதரியின் கண்ணெதிரில் அஞ்சலியை கத்தியால் குத்தி, கொலை செய்த கிரீஷ் தப்பியோடினார். இந்த வழக்கை சி.ஐ.டி.,யிடம், அரசு ஒப்படைத்திருந்தது. விசாரணை நடத்திய அதிகாரிகள், ஹூப்பள்ளி நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். கிரீஷின் குற்றம் உறுதியானதால், அவருக்கு ஆயுள் தண்டனையும், 45,000 ரூபாய் அபராதம் விதித்து, நீதிபதி பல்லவி, நேற்று தீர்ப்பளித்தார்.