| ADDED : மே 16, 2024 01:14 AM
மும்பை,:குறைந்தபட்சம் 10 சதவீத பொது பங்குதாரர்கள் என்ற இலக்கை எட்ட, எல்.ஐ.சி., நிறுவனத்துக்கு, செபி, மூன்று ஆண்டுகள் கூடுதல் அவகாசம் வழங்கியுள்ளது. பொதுத்துறை காப்பீடு நிறுவனமான எல்.ஐ.சி., கடந்த 2022ம் ஆண்டு மே மாதம், பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டது. இதையடுத்து, பட்டியலிடப்பட்ட இரண்டு ஆண்டுகளுக்குள், குறைந்தபட்சம் 10 சதவீதம் அளவுக்கு பொது பங்குதாரர்களை கொண்டிருக்க வேண்டும் என்று செபி உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், இந்த உத்தரவை பின்பற்ற எல்.ஐ.சி.,க்கு தற்போது மூன்று ஆண்டுகள் கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து, வரும் 2027ம் ஆண்டு மே 16ம் தேதிக்கு முன்னதாக, எல்.ஐ.சி., இந்த விதிகளை பின்பற்ற வேண்டும். ஏற்கனவே, குறைந்தபட்சம் 25 சதவீதம் பொது பங்குதாரர்களை, பட்டியலிடப்பட்ட ஐந்து ஆண்டுகளுக்குள் கொண்டிருக்க வேண்டும் என்ற விதியை பின்பற்ற, எல்.ஐ.சி.,க்கு வரும் 2032ம் ஆண்டு மே மாதம் வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.