ஓசூரில் ரூ.100 கோடியில் டிராக்டர் தொழில்நுட்ப மையம்
சென்னை:ஓசூரில், 100 கோடி ரூபாய் முதலீட்டில், உலகளாவிய தொழில்நுட்ப மையம் அமைக்க இருப்பதாக, 'வி.எஸ்.டி., டில்லர்ஸ் டிராக்டர்ஸ்' நிறுவனம் அறிவித்துள்ளது.பெங்களூரை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் வேளாண் உபகரணங்கள் தயாரிப்பு நிறுவனமான வி.எஸ்.டி., டில்லர்ஸ் டிராக்டர்ஸ், தன் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் திறனை அதிகரிப்பதற்காக, புதிய தொழில்நுட்ப மையத்தை அமைக்க உள்ளது. மேலும், மின்சாரம் சார்ந்த கண்டுபிடிப்புகளை விரைவுபடுத்துவது, தனியுரிமை தொழில்நுட்பங்களை உருவாக்குதல் மற்றும் பரிசோதனை திறனை அதிகரிப்பது ஆகியவற்றுடன், சர்வதேச நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுவதை ஊக்குவிக்கும் வகையிலும் இந்த மையம் வடிவமைக்கப்பட உள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில், 394 டிராக்டர்களை விற்பனை செய்ததாக, தன் விற்பனை அறிக்கையில் இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.நிலத்தை உழுவதற்கு பயன்படுத்தப்படும் 4,022 டில்லர்களையும் இந்நிறுவனம் விற்பனை செய்துள்ளது.