சென்னை:மனிதவள மேம்பாட்டு துறையில் ஈடுபட்டு வரும், 'சியல்' எச்.ஆர்., குழுமத்தின் வருவாய், கடந்த ஆண்டில், 1,000 கோடி ரூபாயை தாண்டியுள்ளது. இதுகுறித்து, சியல் எச்.ஆர்., குழும தலைவர் 'மா பா' கே.பாண்டியராஜன், நேற்று, செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:மா பா நிறுவனம் துவங்கி, 18 ஆண்டுகள் ஆன பின், 1,000 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியது. அதை உள்ளடக்கிய சியல் எச்.ஆர்., குழுமம், 2015ல் துவங்கப்பட்டது. எங்கள் நிறுவனம் தான், மனித வள மேம்பாட்டு துறையில், ஏ.ஐ., எனப்படும், 'ஆர்டிபிஷியல் இண்டலிஜென்ஸ்' மற்றும் எஸ்.ஏ.எஸ்., தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறது. இதனால், சியல் துவங்கிய ஒன்பது ஆண்டுகளிலேயே, கடந்த ஆண்டில், 1,086 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளது. நிகர லாபம், 25.14 கோடி ரூபாயாக உள்ளது. இந்தியாவில் மனித வள மேம்பாட்டு துறை வளர்ச்சி, 14 சதவீதமாக உள்ளது. எங்கள் நிறுவன வளர்ச்சி, 54 சதவீதமாக உள்ளது. பிரிட்டனை சேர்ந்த, 'பிராண்ட் பைனான்ஸ்' நிறுவனம், 'இந்தியா 100' என்ற ஆய்வறிக்கையில் சிறந்த இந்திய நிறுவனங்களின் பட்டியலை கடந்த மாதம் வெளியிட்டது.அதில், 2.50 லட்சம் கோடி ரூபாய் சந்தை மதிப்பு கொண்ட இந்தியாவின் மனித வள மேம்பாட்டு துறையில், சியல் வலிமை வாய்ந்த நிறுவனமாக உருவெடுத்து உள்ளது. இவ்வாறு கூறினார்.