| ADDED : ஜூலை 18, 2024 11:59 PM
புதுடில்லி:உளவு பார்ப்பது, கண்காணிப்பது மற்றும் தாக்குதல்களை மேற்கொள்வது ஆகியவற்றில், ட்ரோன்கள் பயன்பாடு அதிகரித்து வருவதன் காரணமாக, தற்போது போரின் தன்மை மாறிவருகிறது. ராணுவ தளங்கள், விமான நிலையங்கள், நிதி நிறுவனங்கள் உள்ளிட்ட முக்கிய இடங்களை பாதுகாக்க, இந்தியா உட்பட, உலக அளவில் ட்ரோன் எதிர்ப்பு சாதன அமைப்புக்கான தேவை உயர்ந்து வருகிறது. இந்நிலையில், இந்தியாவில் ட்ரோன் எதிர்ப்பு சாதன சந்தை, அடுத்த ஐந்து ஆண்டுகளில், 28 சதவீதம் வளர்ச்சி பெறும் என, 'மோதிலால் ஆஸ்வால்' நிதி சேவைகள் நிறுவன அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:ராணுவத்துக்கு 1,200 ட்ரோன் எதிர்ப்பு சாதனங்களுக்கான தேவை இருப்பதால், இதன் சந்தை, அடுத்த ஐந்து ஆண்டுகளில் 12,000 கோடி ரூபாயாக இருக்கும். தேவை காரணமாக, ஆண்டுக்கு 2,400 கோடி ரூபாய்க்கு ஆண்டு சந்தை வாய்ப்பை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.குறிப்பாக, 5 கி.மீ.,க்கும் அதிகமான ரேஞ்ச் கொண்ட ட்ரோன் எதிர்ப்பு சாதனங்களின் தேவை அதிகரித்து வருகிறது. இதன் ரேஞ்சை மேலும் அதிகரிப்பதற்கான தொழில்நுட்பங்கள் தொடர்ந்து வளர்ந்து வருகின்றன. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.