| ADDED : ஜூன் 07, 2024 02:48 AM
மும்பை:உள்நாட்டு விமான பயணியர் எண்ணிக்கை, கடந்த மே மாதத்தில், 5 சதவீதம் வளர்ச்சி கண்டதாக, கடன் மதிப்பீட்டு நிறுவனமான 'இக்ரா' தெரிவித்துள்ளது.கடந்த மே மாதத்தில், இந்தியாவில் விமானப் பயணம் மேற்கொண்டவர்களின் எண்ணிக்கை, 1.39 கோடியாக மதிப்பிடப்பட்டு உள்ளது. இது, கடந்த ஏப்ரலில் இருந்த 1.32 கோடியை விடவும், 5 சதவீதம் உயர்வு. மேலும், கடந்த ஆண்டு மே மாத பயணியர் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையிலும், 5 சதவீதம் உயர்வாகும்.கொரோனா பெருந்தொற்று காரணமாக, விமான போக்குவரத்து அமைச்சகம், ஜூன் 2021ல், உள்நாட்டு விமானங்களின் இருக்கை அளவை, 50 சதவீதம் குறைத்தது. பின் படிப்படியாக இதற்கு தளர்வு அளிக்கப்பட்டு, அக்டோபர் 2021ல் இந்த கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டன.இதை தொடர்ந்து, விமானங்களின் இருக்கை உபயோகம், படிப்படியாக வளர்ச்சி காண துவங்கியது. கடந்த 2024ம் நிதியாண்டுக்கான மொத்த உள்நாட்டு விமான பயணியர் எண்ணிக்கை, 15.40 கோடியாக உள்ளது. இதையடுத்து, கொரோனாக்கு முன் இருந்த 14.20 கோடி எனும் எண்ணிக்கை தற்போது முறியடிக்கப்பட்டு உள்ளது.