| ADDED : ஜூலை 19, 2024 12:09 AM
புதுடில்லி:வாகனத்தின் முகப்பு கண்ணாடியில், உரிய முறையில் 'பாஸ்டேக் ஸ்டிக்கர்' ஒட்டாத வாகன ஓட்டிகளிடம் இருந்து, இரு மடங்கு கட்டணத்தை வசூலிக்க, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அதிரடியாக உத்தரவிட்டுஉள்ளது. நாடு முழுவதும் 45,000 கி.மீ., தொலைவுக்கு தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இதில் அமைக்கப்பட்டுள்ள 1,000 டோல்கேட் வாயிலாக, பாஸ்டேக் முறையில் சுங்க கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், சில வாகன ஓட்டிகள் வேண்டுமென்றே பாஸ்டேக் ஸ்டிக்கரை தங்களது வாகனங்களில் முகப்பு பகுதியில் ஒட்டாமல், கையில் வைத்து கொள்கின்றனர். இதனால், டோல்கேட்களில் தேவையற்ற கால தாமதம் ஏற்படுகிறது.இந்நிலையில், தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-பாஸ்டேக் ஸ்டிக்கர் தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகளை அனைத்து டோல்கேட்களிலும், வாகன ஓட்டிகளுக்கு தெளிவாக தெரியும்படி காட்சிப்படுத்த வேண்டும். மேலும், டோல்கேட்களில் பணம் வசூலிக்கும் முகவர்கள், ஸ்டிக்கர் ஒட்டாமல் வரும் வாகனங்களை, அதன் பதிவு எண்ணுடன் 'சிசிடிவி' காட்சிகளாக பதிவு செய்வது அவசியம். இது கட்டணம் வசூலித்ததற்கு உரிய ஆதாரமாக பராமரிக்கப்படும். பாஸ்டேக் ஸ்டிக்கர் ஒட்டாத வாகனங்கள், தானியங்கி டோல்கேட்களில் ஒருபோதும் அனுமதிக்கப்பட மாட்டாது. இரு மடங்கு கட்டணத்துடன், அந்த வாகனம் கருப்புப் பட்டியலுக்கு மாற்றப்படும். இது தவிர, பாஸ்டேக் ஸ்டிக்கர் வினியோகிக்கும் வங்கிகள், வாகனங்களில் ஒட்டப்படுவதை உறுதி செய்ய, அதன் வாடிக்கையாளார்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.