உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / அமராவதி நகரில் ரியல் எஸ்டேட் விலை சந்திரபாபு வெற்றியால் 100% உயர்வு

அமராவதி நகரில் ரியல் எஸ்டேட் விலை சந்திரபாபு வெற்றியால் 100% உயர்வு

புதுடில்லி,:தேர்தலில் சந்திரபாபு நாயுடு வெற்றி பெற்றதை அடுத்து, தற்போது அமராவதியில் நிலங்களின் விலை உயரத் துவங்கி உள்ளது.ஆந்திர பிரதேச மாநிலம், கடந்த 2014ம் ஆண்டில், ஆந்திரா, தெலுங்கானா என இரண்டு மாநிலங்களாக பிரிக்கப்பட்டது. துவக்கத்தில் இவ்விரு மாநிலங்களும், ஹைதராபாதை, 10 ஆண்டுகளுக்கு தலைநகராக பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.இதையடுத்து, அப்போது ஆந்திர பிரதேச முதல்வராக இருந்த சந்திரபாபு நாயுடு, 50,000 கோடி ரூபாய்க்கும் மேலான முதலீட்டில், அமராவதி என்ற புதிய நகரத்தை தலை நகராக உருவாக்க திட்டமிட்டார். பிரதமர் மோடி கடந்த அக்டோபர் 2015ல், அமராவதி நகருக்கான அடிக்கல்லை நாட்டினார். இதைத் தொடர்ந்து, அமராவதியில் 9 நகரங்கள் மற்றும் 27 கிராமங்கள் உருவாக்குவதற்கான திட்டங்கள் சிலவற்றையும் சந்திரபாபு நாயுடு அறிவித்தார். இத்திட்டங்களுக்கு, உலக வங்கி 1,660 கோடி ரூபாயும், ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி 2,490 கோடி ரூபாயும் முதலீடு செய்வதாக உறுதி அளித்தன.எனினும், கடந்த 2019 தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி தோல்வி அடைந்ததால், இந்த முதலீடுகள் மேற்கொள்ளப்படவில்லை. புதிதாக பொறுப்பேற்ற ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான அரசு, புதிதாக மூன்று தலை நகரங்களை உருவாக்க திட்டமிட்டது. இதனால் அமராவதியின் வளர்ச்சி சரிந்து, நிலங்களின் விலையும் சரியத் தொடங்கின.இந்த நிலையில், தற்போது நடந்து முடிந்த தேர்தலில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி வெற்றி பெற்றுள்ளதை அடுத்து, அமராவதி மீண்டும் வளர்ச்சி காணும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.தேர்தல் முடிவுகளுக்கு பின், அமராவதியில் நிலம் வாங்குவோரின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளதாகக் கூறப்படுகிறது. முன்பு ஒன்பது சதுர அடி, 10-15 ஆயிரம் ரூபாயாக இருந்த நிலையில், தற்போது 40-50 ஆயிரம் ரூபாயாக உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.பத்து ஆண்டு காலம் நிறைவு அடைந்ததை அடுத்து, ஹைதராபாதும் இனி தலைநகராக பகிரப்படாது. எனவே, அமராவதிக்கான வளர்ச்சி திட்டங்கள் அனைத்தையும் புதிய அரசு வேகமாக செயல்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய அரசும் இதற்கு அனைத்து விதமான உதவி புரிய வாய்ப்பு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ