உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / ஸ்டீல் தரக்கட்டுப்பாடு விதிமுறைகள் சிறுதொழில் துறையினரை பாதிக்கும்

ஸ்டீல் தரக்கட்டுப்பாடு விதிமுறைகள் சிறுதொழில் துறையினரை பாதிக்கும்

புதுடில்லி:ஸ்டீலுக்கான புதிய தரக் கட்டுப்பாடு விதிமுறைகளால், ஆணி, நட், போல்ட் உள்ளிட்ட ஸ்டீல் உதிரி பாகங்களின் இறக்குமதி பாதிக்கப்படுவதோடு, இதன் உற்பத்தியில் ஈடுபட்டு வரும் சிறுதொழில் நிறுவனங்களும் கடுமையாக பாதிக்கப்படக்கூடிய வாய்ப்புள்ளதாக ஜி.டி.ஆர்.ஐ., அமைப்பு தெரிவித்துள்ளது. இதனால், வேலை இழப்புகள் ஏற்படக்கூடிய அபாயம் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதுமட்டுமல்லாமல், வாகனம், ஏரோஸ்பேஸ், மின்னணுவியல், பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளின் உற்பத்தியும் பாதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. ஏனென்றால், இத்துறைகளில் பயன்படுத்தப்படும் உயர்தர ஸ்டீல் பாகங்கள் இந்தியாவில் தயாரிக்கப்படுவதில்லை; இறக்குமதி செய்யப்படுகின்றன. புதிய விதிமுறைகளின்படி, இதை ஏற்றுமதி செய்யும் வெளிநாட்டு நிறுவனங்கள், பி.ஐ.எஸ்., எனும் இந்திய தர நிர்ணய ஆணையத்தின் அனுமதி பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதுவரை எந்த ஒரு வெளிநாட்டு மற்றும் இந்திய நிறுவனமும் இதற்கான அனுமதி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், வரும் 20ம் தேதி முதல் புதிய விதிமுறைகள் நடைமுறைக்கு வர உள்ளதால், இவற்றின் இறக்குமதி தடைபடும் சூழல் ஏற்பட்டுள்ளது. கடந்தாண்டு மட்டும் 9,500 கோடி ரூபாய்க்கு வெளிநாட்டிலிருந்து ஆணி, நட், போல்ட் உள்ளிட்டவை இறக்குமதி செய்யப்பட்டன. சீனாவிலிருந்து மட்டும் 2,660 கோடி ரூபாய்க்கு இறக்குமதி செய்யப்பட்டிருந்தது.

கட்டுப்பாடு ஏன்?

தரமற்ற ஸ்டீல் இறக்குமதி மற்றும் உள்நாட்டு உற்பத்தியை தடுக்கும் விதமாக, அனைத்து தர ஸ்டீலையும் உள்ளடக்கிய வகையில் தரக் கட்டுப்பாடு நெறிமுறைகளை மத்திய அரசு சில மாதங்களுக்கு முன் வெளியிட்டது. இதன்படி ஸ்டீல் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் அனைத்தும், பி.ஐ.எஸ்.,சின் அனுமதி பெற்ற பிறகே இதன் விற்பனையில் ஈடுபட முடியும். ஆரம்ப கட்டமாக, வரும் 20ம் தேதி முதல், இறக்குமதி மற்றும் உள்நாட்டில் உருக்கு தயாரிக்கும் பெரு நிறுவனங்களுக்கு இந்த விதிமுறைகள் பொருந்தும். சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், வரும் ஜூன் 20 மற்றும் செப்டம்பர் 20 முதல் இதை கடைப்பிடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அனுமதி பெறுவதற்கான நடைமுறை சிக்கலானது என்பது மட்டுமல்லாமல் காலதாமதம் ஆகும் என்பதால், சிறு நிறுவனங்கள் பாதிக்கப்பட்டு வேலை இழப்புகள் ஏற்படும் எனக் கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை