புதுடில்லி : கொடுத்த கடனை வசூலித்து தர, ஏஜென்டுகளை பயன்படுத்தியது தொடர்பாக விளக்கமளிக்கக் கோரி, ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி தலைவருக்கு, அலகாபாத் உயர் நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. கடந்த 2007ம் ஆண்டு உச்ச நீதிமன்றம், வங்கிகள் இப்படி ஏஜென்டுகளை பயன்படுத்தி கடனை வசூலிப்பதற்கு தடை விதித்து, உத்தரவிட்டிருந்த நிலையில், அந்த உத்தரவை மீறியதற்கான காரணத்தை விளக்கக் கோரி, சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. வீட்டு கடன்
வெளிநாடு வாழ் இந்தியரான ராகுல் சிங், கடந்த 2002ல், ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கியின் நொய்டா கிளையில் 7.80 லட்சம் ரூபாய்க்கு வீட்டுக் கடன் வாங்கியுள்ளார். இதையடுத்து வட்டியுடன் சேர்த்து மொத்த கடனையும், கடந்த 2007ம் ஆண்டே திருப்பி செலுத்தியுள்ளார். இந்நிலையில், கடன் தரத்துக்கான 'சிபில்' குறியீட்டில், ராகுல் சிங், கடனை திருப்பிச் செலுத்தவில்லை என்று வங்கியின் சார்பில் தவறுதலாக பதிவேற்றம் செய்யப்பட்டது. போதாக்குறைக்கு, கடந்த 2014ம் ஆண்டு, இவர் மீது சிவில் வழக்கும் தொடுக்கப்பட்டது. இந்நிலையில் தன் மீதான இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி பதில் மனு தாக்கல் செய்துள்ளார் ராகுல் சிங். கடந்த 2013ம் ஆண்டு, அவரது வீட்டிற்கு கடனை வசூலிப்பதற்காக வந்தவர்கள் தன்னை தரக்குறைவாக நடத்தியதாகவும்; இழிவான கருத்துக்களை கூறி துயரத்தை ஏற்படுத்தியதாகவும் புகார் தெரிவித்துள்ளார். மேலும், வங்கி அதிகாரிகளின் மீது மானநஷ்ட வழக்கும் தொடர்ந்து உள்ளார்.வங்கிகள் கொடுத்த கடனை வசூலிப்பதற்காக ஏஜென்டுகளை பயன்படுத்த துவங்கிய பின், பல இடங்களில் கடன் பெற்றவர்கள் துன்புறுத்தப்படுவதாகவும் உடல் ரீதியான தாக்குதல்களை எதிர்கொள்வதாகவும் செய்திகள் வெளியாகி வந்தன. தடை
இதன் தொடர்ச்சியாக, கடந்த 2007ல், உச்ச நீதிமன்றத்தில் இது தொடர்பாக நடந்த ஒரு வழக்கில், வங்கிகள் கடனை வசூலிக்க ஏஜென்டுகளை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது.இப்படி உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி ஆறு ஆண்டு களுக்குப் பிறகும், வங்கி எதற்காக ஏஜென்சிகளை பயன்படுத்தியது என்பது குறித்து விளக்கமளிக்கக் கோரி, ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி தலைவருக்கு உயர் நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. இந்த வழக்கின் அடுத்த விசாரணை, வரும் ஜூலை 10ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.