உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / நகைக்கடன் பெறும்போது கவனத்தில் கொள்ள வேண்டியவை

நகைக்கடன் பெறும்போது கவனத்தில் கொள்ள வேண்டியவை

மற்ற எந்த கடனையும் போலவே, தங்க நகைக்கடன் பெறும்போதும், திரும்பி செலுத்தும் தன்மை, மாதத்தவணை உள்ளிட்ட அம்சங்களை கவனிக்க வேண்டும்.தங்க நகைக்கடன் அதிகரித்து வருவதை அடுத்து சில மாதங்களுக்கு முன் ரிசர்வ் வங்கி, ரொக்கமாக கடன் வழங்கும் தொகை 20,000 ரூபாய்க்குள் இருக்க வேண்டும் என அறிவுறுத்தியது. தங்க நகைக் கடன் செயல்முறையில் வங்கிகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் தெரிவித்தது. ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டை மீறி, தங்க நகைக்கடன் பெறுவது தொடர்ந்து அதிகரித்து வருவது தெரிய வந்துள்ளது. ஜூன் மாதம் தங்க நகைக்கடன் வழங்கல் 12 சதவீதம் அதிகரித்திருப்பதாக கிரிசில் அமைப்பின் தகவல் தெரிவிக்கிறது.

எளிய வசதி

தங்க நகைக்கடன் வசதி அதிகம் நாடப்படுவதற்கான காரணம், இது எளிதாக இருப்பது தான். குறைந்த வட்டி விகிதம், அதிக ஆவணமாக்கல் தேவைப்படாதது, உடனடி விநியோகம் என பல்வேறு அம்சங்களும் தங்க நகைக்கடன் பெறுவதை எளிதாக்குகிறது. பெரும்பாலும் தனிநபர்களும், வணிகர்களும், குறுகிய கால தேவை மற்றும் அவசரத் தேவைக்காக இந்த கடன் வசதியை பயன்படுத்திக் கொள்கின்றனர். இந்த கடனுக்கான வட்டி விகிதம் 8.8 சதவீதம் முதல் அமைகிறது. ஆனால், தனிநபர் கடனுக்கான வட்டி விகிதம் 9 சதவீதம் முதல் 45 சதவீதம் வரை அமையலாம்.தங்க நகைக்கடன் பெற அடையாள சான்றிதழ் இருந்தால் போதும். வருமானச் சான்றிதழ் போன்றவை தேவையில்லை. கே.ஒய்.சி., நடைமுறை பின்பற்றப்பட்டாலும், செயல்முறை என்பது எளிதானது. கடன் வழங்க, நகை மதிப்பிற்கும் கடனுக்குமான தொகை விகிதம், 75 சதவீதத்திற்குமேல் இருக்கக் கூடாது என ரிசர்வ் வங்கி நெறிமுறை வலியுறுத்துகிறது. செயல்முறை கட்டண மாக ஒரு தொகை வசூலிக்கப்படலாம். இது வங்கிகள், நிதி நிறுவனங்களுக்கு ஏற்ப மாறுபடலாம்.

ஆய்வு தேவை

தங்க நகைக்கடன் பெறுவது எளிதாக இருந்தாலும், பல்வேறு அம்சங்களை மனதில் கொள்ள வேண்டும். கடன் வசதி பெறும் வங்கி அல்லது நிதி நிறுவனத்தை கவனமாக தேர்வு செய்ய வேண்டும். தங்க நகை வழங்குவதில் அதிக நிபுணத்துவம் கொண்ட வங்கியை தேர்வு செய்வது நல்லது. தேவைக்கு ஏற்ற கடன் வசதி அம்சங்கள் பிரத்யேகமாக அமையும் வாய்ப்பிருக்கிறது. வட்டி விகிதத்தையும் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். செயல்முறை கட்டணத்தையும் கணக்கிட வேண்டும். முக்கியமாக திரும்பிச் செலுத்தும் செயல்முறையை கவனிக்க வேண்டும். ஒரு சில வங்கிகள், வட்டி மற்றும் அசல் இரண்டையும் சேர்த்து தவணையாக செலுத்த வழி செய்கின்றன. கடனுக்கான காலம் மூன்று மாதம் முதல் 5 ஆண்டு வரை அமையலாம். தொகையை முன்கூட்டியே செலுத்துவதற்கான அனுமதி மற்றும் அபராதக் கட்டணத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டும். ஒரு சில நேரங்களில் கடன் பெறுவதை விட, நகையை விற்பது பொருத்தமாக இருக்கலாம். அதேபோல, பணத்தை திரும்பிச் செலுத்தும் தன்மை முக்கியம். அளவுக்கு அதிகமாக கடன் பெறுவதைத் தவிர்க்க வேண்டும். மற்ற கடன்களையும் சேர்த்து மொத்த தவணை வருமானத்தில் 40 சதவீதத்திற்குள் இருப்பது நல்லது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ