உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / ரூ.5 லட்சம் வரை யு.பி.ஐ.,யில் செலுத்தும் நடைமுறை அமல்: வரி, மருத்துவம், கல்வி பரிவர்த்தனைகளுக்கு பயன்படுத்தலாம்

ரூ.5 லட்சம் வரை யு.பி.ஐ.,யில் செலுத்தும் நடைமுறை அமல்: வரி, மருத்துவம், கல்வி பரிவர்த்தனைகளுக்கு பயன்படுத்தலாம்

புதுடில்லி: மின்னணு பணப் பரிவர்த்தனையின் முக்கிய வசதியான யு.பி.ஐ., வாயிலாக, இனி, 5 லட்சம் ரூபாய் வரை பணம் செலுத்தலாம். இந்த நடைமுறை நேற்றிலிருந்து அமலுக்கு வந்துள்ளது.யு.பி.ஐ., தொழில்நுட்பத்தில், மின்னணு பணப் பரிவர்த்தனைகள் அதிக அளவில் நடைபெறுகின்றன. எனினும், ஒரு பரிவர்த்தனைக்கு அதிகபட்ச தொகையாக, 1 லட்சம் ரூபாய் உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. இதை, 5 லட்சம் ரூபாயாக அதிகரித்து, என்.பி.சி.ஐ. அறிவித்தது. இதையடுத்து, இனி யு.பி.ஐ., வாயிலாக, 5 லட்சம் ரூபாய் வரை வருமான வரி, மருத்துவமனை செலவுகள், கல்வி கட்டணம், புதிய பங்கு வெளியீட்டில் முதலீடு, ரிசர்வ் வங்கியின் சில்லரை முதலீட்டு திட்டங்கள் ஆகியவற்றில் பணப் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளலாம். அதிகரித்து வரும் யு.பி.ஐ., பணப் பரிவர்த்தனைகளை கருத்தில் கொண்டு, அதிக மதிப்பி லான பரிவர்த்தனைகளையும் அனுமதிக்க இந்த முடிவு வகை செய்கிறது.எனினும், யு.பி.ஐ., பணப் பரிவர்த்தனைக்கான உச்சவரம்பு, வங்கிக்கு வங்கி மாறுபடுவதால், ஆன்லைன் வங்கி சேவை, மொபைல் வங்கி சேவை வாயிலாக, அவரவர் வங்கிக் கணக்கில் செலவழிப்பு உச்சவரம்பை அதிகரித்து மாற்றிக் கொள்ள வேண்டியது அவசியம். இது தொடர்பாக, வங்கிகளுக்கு என்.பி.சி.ஐ., அறிவுறுத்தியுள்ளது. அதிக மதிப்பிலான ரொக்கப் புழக்கத்தை குறைக்கும் வகையில், மின்னணு பணப் பரிவர்த்தனையை ஊக்குவிக்க இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

டெபிட் கார்டு இன்றி டிபாசிட்

டெபிட் கார்டு இல்லாமல், யு.பி.ஐ., வாயிலாக, ஏ.டி.எம்.,மில் பணம் டிபாசிட் செய்யும் வசதியும் விரைவில் அனைத்து வங்கிகளிலும் வழங்கப்பட இருக்கிறது. ஏற்கனவே, 'ஆக்சிஸ் வங்கி, யூனியன் பாங்க் ஆப் இந்தியா' வங்கிகளின் ஏ.டி.எம்., களில் இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இதை, மற்ற வங்கிகளும் விரைவில் விரிவுபடுத்த உள்ளன. இதன்படி, டெபிட் கார்டு இல்லாமல் யு.பி.ஐ., செயலியை மொபைல் போனில் திறந்து, ஏ.டி.எம்., திரையில் இடம்பெறக்கூடிய கியு.ஆர்., கோடை ஸ்கேன் செய்து, பயனாளியின் வங்கிக் கணக்கை தேர்வு செய்ய வேண்டும். பிறகு, யு.பி.ஐ., ரகசிய எண்ணை பதிவிட்டு, ரொக்கம் வைப்பதற்கான பகுதியில் பணத்தை வைத்தால், டிபாசிட் செய்யப்பட்டு விடும். காகித ஒப்புகை சீட்டு, டெபிட் கார்டு ஏதும் தேவையின்றி, முற்றிலும் மின்னணு முறையிலான இந்த வசதியில், அதிகபட்சம் 50,000 ரூபாய் டிபாசிட் செய்யலாம். 24 மணி நேரமும், எங்கிருந்தும் எந்த பகுதியில் உள்ள வங்கிக் கணக்கிலும் பணத்தை டிபாசிட் செய்ய முடியும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை