தேங்காய் எண்ணெய் விலை லிட்டர் ரூ.410 ஆக உயர்வு
புதுடில்லி:தேங்காய் எண்ணெய்யின் சில்லரை விற்பனை விலை, லிட்டருக்கு 410 ரூபாயாக அதிகரித்துள்ளது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 80 ரூபாய் விலை உயர்ந்துள்ளது. கொப்பரைத் தேங்காயின் உற்பத்தி குறைந்துள்ளதே விலை உயர்வுக்கு காரணம் என்றும்; இதனால் தேவை பாதிக்கப்பட்டு, விற்பனை 10 முதல் 20 சதவீதம் வரை சரிந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து, பாமாயில் மற்றும் சூரியகாந்தி எண்ணெய்யை நோக்கி நுகர்வோர் திரும்பியுள்ளனர். பாமாயில் லிட்டர் 130 ரூபாய்க்கும்; சூரியகாந்தி எண்ணெய் 150 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. இதுதொடர்பாக, கொச்சின் எண்ணெய் வணிகர் சங்கத் தலைவர் தலாத் மஹ்மூத் தெரிவித்ததாவது: இந்தியாவில் சமையல் தேவைகளுக்கு தேங்காய் எண்ணெய்யை அதிகளவில் பயன்படுத்தும் ஒரே மாநிலம் கேரளா மட்டுமே. ஒரு கிலோ கொப்பரைத் தேங்காயின் விலை தமிழகத்தில் 227 ரூபாயாக உள்ள நிலையில், கேரளாவில் 231 ரூபாயாக அதிகரித்துள்ளது. உற்பத்தி குறைந்து வருவதால், பச்சை தேங்காயின் விலையும், கிலோ ஒன்றுக்கு 70 ரூபாயாக உயர்ந்துள்ளது. இஸ்ரேல் - ஈரான் மோதலைத் தொடர்ந்து, சரக்கு போக்குவரத்து செலவு அதிகரிக்கும் என்பதால், அனைத்து விதமான சமையல் எண்ணெய் விலையும் உயரக் கூடும். தேங்காய் எண்ணெய் விலை உயர்வால், உள்நாட்டு சந்தையில் தரக் குறைவான, பூஞ்சை தாக்கிய கொப்பரையிலிருந்து தயாரிக்கப்படும் தரமற்ற மற்றும் கலப்பட எண்ணெய் விற்பனை அதிகரித்துள்ளது. சந்தையில் கலப்பட தேங்காய் எண்ணெய் விற்பனையைக் கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை, மத்திய அரசு எடுக்க வேண்டும். மேலும், மூலப்பொருட்களின் கடுமையான பற்றாக்குறையால், தொழில்துறை எதிர்கொள்ளும் நெருக்கடியைக் கருத்தில் கொண்டு, தேங்காய் எண்ணெய் மற்றும் கொப்பரைக்கான இறக்குமதி கட்டுப்பாடுகளை நீக்க, விரைவில் அரசிடம் நேரடியாக வலியுறுத்த உள்ளோம்.இவ்வாறு தெரிவித்தார்.கொப்பரைத் தேங்காயின் பற்றாக்குறையால், செப்டம்பர் மாதத்துக்கு முன்னதாக, தேங்காய் எண்ணெய் விலை 500 ரூபாயாக அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. எனினும், கச்சா சமையல் எண்ணெய்களின் இறக்குமதி வரியை, அரசு சமீபத்தில் 10 சதவீதம் குறைத்தது, விலை உயர்வை கட்டுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.