மேலும் செய்திகள்
3 நாட்களில் ரூ.27,000 கோடிக்கு பங்கு விற்பனை
07-Oct-2024
புதுடில்லி: இந்திய பங்குச் சந்தையில் இருந்து அக்டோபரில் மட்டும் இதுவரை, அதிகபட்சமாக 84,000 கோடி ரூபாய் முதலீட்டை அன்னிய நிறுவன முதலீட்டாளர்கள் திரும்ப பெற்றுஉள்ளனர்.அன்னிய நிறுவன முதலீட்டாளர்களின் தொடர்ச்சியான வெளியேற்றத்துக்கு சீன பொருளாதாரக் கொள்கை, இந்திய பங்குகளின் உயர் மதிப்பீடு, இரண்டாவது காலாண்டில் நிறுவனங்களின் மிதமான வளர்ச்சி, அமெரிக்க டாலரின் மதிப்பு உயர்வு ஆகியவை காரணமாக கூறப்படுகின்றன.பண்டிகை காலமான அக்டோபரில், முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இந்திய பங்குச் சந்தையில், கிட்டத்தட்ட 84,000 கோடி ரூபாய் முதலீட்டை அன்னிய முதலீட்டாளர்கள் திரும்ப பெற்று உள்ளனர். இது, கடந்த 2020ம் ஆண்டு மார்ச் மாதத்தில், கோவிட் சமயத்தில், 58,932 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை விற்று வெளியேறியதை விட அதிகமாகும்.அன்னிய முதலீட்டாளர்கள் பங்குகளை தொடர்ச்சியாக விற்று வரும் நிலையில், 4 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு உள்நாட்டு முதலீட்டாளர்கள் நடப்பாண்டில் பங்குகளை வாங்கி உள்ளனர். கடந்த ஒரு மாதத்தில் மட்டும், சீன நிறுவனங்களில் குவிந்த அன்னிய முதலீடு, கிட்டத்தட்ட 1.57 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்து உள்ளது.
இந்திய சந்தையில் இருந்து வெளியேறுவதற்கு, 'இந்தியாவை விற்று, சீனாவை வாங்கு' என்ற கொள்கையை அன்னிய முதலீட்டாளர்கள் பங்கு வர்த்தகத்தில் பின்பற்றுவதே காரணமென கூறப்படுகிறது. இந்திய பங்கு சந்தை குறியீடான நிப்டி, 4 சதவீதம் சரிவை கண்டுள்ள சூழலில், 'ஹாங்சேங்' 14 சதவீதமும், ஷாங்காயின் 'சி.எஸ்.ஐ., 300' குறியீடு 22 சதவீதம் வரையும் உயர்வு கண்டுள்ளன.சீனப் பொருளாதார கொள்கை மாற்றத்தால், நடப்பாண்டில் மட்டுமின்றி, 2025 - -26ம் ஆண்டு வரை வளர்ச்சி நீடிக்கும் என, நிதி மேலாண்மை வல்லுனர்களில் ஒருசாரார் மதிப்பிடுகின்றனர். மேலும், சீன அரசு, பொருளாதாரத்தை நோக்கி தன் பார்வையை திருப்பி இருப்பதால், அரசியல், புவிசார் அரசியல், எல்லை பிரச்னைகளில் அடக்கி வாசிக்குமென கூறுகின்றனர்.அத்துடன், இந்திய பங்குகளின் உயர் மதிப்பீடு, காலாண்டு முடிவுகளில் மிதமான வளர்ச்சி மற்றும் ரூபாய் மதிப்பு வீழ்ச்சி ஆகியவையும் முதலீட்டாளர்களின் கவலைக்கு காரணமாகும்.
07-Oct-2024