கட்டுமானப் பொருட்களுக்கள் உள்ளீட்டு வரி முன்தேதியிட்டு திருத்தம் செய்த அரசு தொழில் வர்த்தக சங்கம் ஆட்சேபனை
மதுரை:வணிக கட்டடங்கள் கட்டுவதற்கான கட்டுமானப் பொருட்களுக்குச் செலுத்திய ஜி.எஸ்.டி., வரியை உள்ளீட்டு வரி வரவாக எடுத்துக்கொள்ளலாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அதை நீர்த்துப்போகச் செய்யும் வகையில் மத்திய அரசு முன் தேதியிட்டு சட்ட திருத்தம் செய்து அமலாக்கம் செய்ததற்கு அக்ரி மற்றும் அனைத்து தொழில் வர்த்தக சங்கம் ஆட்சேபனை தெரிவித்துள்ளது.வாடகை அல்லது குத்தகை விடுவதற்காக கட்டப்படும் கட்டடம், சட்டத்தில் குறிப்பிட்டுள்ளபடி தளவாடமாக கருதப்படும் என்றும் அதன் கட்டுமானப் பொருட்களுக்கு செலுத்திய ஜி.எஸ்.டி., வரியை உள்ளீட்டு வரி வரவாக (ஐ.டி.சி.) எடுத்துக் கொள்ளலாம் என்றும் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இத்தீர்ப்பின் காரணமாக வணிக கட்டடத்தைக் கட்டுவதற்கான சிமென்ட், கம்பி, பிற கட்டுமானப் பொருட்களுக்கு செலுத்திய ஜி.எஸ்.டி., வரியை, வாடகையின் மீது அரசுக்கு செலுத்த வேண்டிய வரியிலிருந்து கழித்துக்கொள்ளலாம். இத்தீர்ப்பு தொழில் வணிகத்துறையினருக்கு வரப்பிரசாதமாக இருந்தது.இத்தீர்ப்பை நீர்த்துப்போகும் வகையிலும், தொழில் வணிகத்தை பாதிக்கும் வகையிலும், ஜி.எஸ்.டி., வரிச்சட்டப் பிரிவு 17(5)(டி)ல் முன் தேதியிட்டு மத்திய அரசு ஒரு திருத்தத்தை 2017 ஜூலை 1 முதல் அமலாகும் வகையில் செய்துள்ளது. அதாவது 'தளவாடம் அல்லது இயந்திரம்' என்றிருந்ததை 'தளவாடம் மற்றும் இயந்திரம்' என்று திருத்தம் செய்துள்ளது. இதனால் வாடகைக்கு விடுவதற்காக மால், ஆடிட்டோரியம் போன்ற வணிகக் கட்டடங்கள் கட்டுவதற்கு உள்ளீட்டு வரிவரவு (ஐ.டி.சி.,) கிடைக்காது.
பூமராங்
இந்த சட்ட திருத்தத்தை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என மதுரை அக்ரி மற்றும் அனைத்துத் தொழில் வர்த்தக சங்கத் தலைவர் ரத்தினவேலு தெரிவித்தார். அவர் கூறுகையில், ''இதற்கான மறுஆய்வு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தாலும் ஏற்கனவே முன்தேதியிட்டு செய்யப்பட்டுள்ள சட்ட திருத்தம் அமலில் இருக்கும் என மத்திய அரசு விளக்கியுள்ளது. விலை ஏற்றத்தைத் தவிர்க்க வரியின் மீது வரி விதிக்கக்கூடாது என்ற ஜி.எஸ்.டி., வரியின் அடிப்படை நோக்கம் இந்தத் திருத்தத்தின் மூலம் கைவிடப்பட்டுள்ளது. தொழில் வணிகத் துறையினரை இது அதிர்ச்சியடையச் செய்துள்ளது. இச்சட்ட திருத்தத்தை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். வணிகக் கட்டடங்கள் கட்டுவதற்கும் உள்ளீட்டு வரி வரவு கிடைக்கச் செய்ய வேண்டும்,'' என்றார்.