கடன் சுமை வலையில் சிக்காமல் இருப்பது எப்படி?
இந்திய இல்லங்களின் கடன் சுமை அதிகரித்து வரும் நிலையில், தனிநபர்கள் கடன் பழக்கத்தை கட்டுக்குள் வைப்பது அவசியமாகிறது.இதற்கு முன் இல்லாத அளவு, இந்திய இல்லங்களின் கடன் அதிகமாக இருப்பதாக தெரிய வந்து உள்ளது. ரிசர்வ் வங்கி அண்மையில் வெளியிட்டுள்ள தகவல்படி, நாட்டின் ஜி.டி.பி.,யில் இல்லங்களின் கடன் கிட்டத்தட்ட 42 சதவீதமாக இருப்பதாக தெரிவிக்கிறது.கடந்த ஆண்டு இறுதியில் இது 43 சதவீதமாக இருந்தது. பத்தாண்டு களுக்கு முன், 26 சதவீதமாகமட்டுமே இருந்தது. இந்திய இல்லங்களின் கடனில், வீட்டுக்கடன் அல்லாத சில்லறை பிரிவு கடன்களே அதிகமாக உள்ளது.நுகர்வு கடன்
இந்திய இல்லங்களின் கடனில், வீட்டுக்கடன் அல்லாத கடன்களின் பங்கு, 55 சதவீதமாக இருக்கிறது. இவை பெரும்பாலும் நுகர்வு சார்ந்த கடன்கள். கிரெடிட் கார்டு கடன், தனிநபர் கடன், நுகர்வு கடன் உள்ளிட்டவை இதில் அடங்கும். இவற்றின் வட்டி விகிதம் அதிகம் என்ற போதிலும் அண்மை ஆண்டுகளில் இந்த வகை கடன்கள் சீராக அதிகரிக்கின்றன. வீட்டுக்கடன், வர்த்தக மற்றும் வேளாண் கடன்களை விட இந்த வகை கடன் வேகமாக வளர்வதும் தெரிய வந்துள்ளது. கடந்த ஆண்டு இறுதி நிலவரப்படி, மொத்த இல்ல கடன்களில் வீட்டுக்கடன் 29 சதவீதமாகவும், வீட்டுக்கடன் அல்லாத கடன்கள் 55 சதவீதமாகவும் உள்ளன.வீட்டுக்கடன் அல்லாத சில்லறை பிரிவு கடன் அதிகரிக்க பல்வேறு காரணங்கள் இருந்தாலும், மாதத்தவணையில் எதையும் வாங்கும் நுகர்வு கலாச்சாரத்தின் தாக்கம் முக்கியமாக கருதப்படுகிறது. கிரெடிட் கார்டு அல்லது தனிநபர் கடன் மூலம் பொருட்களை வாங்கி மாதத்தவணையில் தொகையை செலுத்தும் வழியை பலரும் பின்பற்றுகின்றனர். வீட்டு உபயோக பொருட்கள் மட்டும் அல்லாது பெரும்பாலான பொருட்கள், சேவைகளை வாங்க கடன் வசதியை நாடும் பழக்கம் அதிகரித்து வருகிறது. இடர் அதிகம் கொண்ட இந்த வகை கடன்கள் அதிகரித்து வருவது குறித்து வல்லுநர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இடர் மிக்க கடன்கள் அதிகரிப்பது, கடனை திரும்ப செலுத்த முடியாத தன்மையை அதிகரித்து பொருளாதார நோக்கில் பிரச்னையை உண்டாக்கும் அபாயம் இருப்பது ஒரு பக்கம் என்றால், தனிநபர்களை பொறுத்தவரை கடன் சுமை வலையில் சிக்கி கொள்ளும் அபாயத்தையும் கொண்டுள்ளது. மத்திய தர குடும்பங்கள் இத்தகைய கடன் வலையில் சிக்காமல் இருப்பதில் கவனம் செலுத்த வேண்டும். நல்ல ஊதியம் பெறும் குடும்பங்களில் கூட, மாதத்தவணைக்கான தொகை அதிகம் இருப்பதாக கருதப்படுகிறது.எதிர்பாராத நெருக்கடி
கடன் தவணைக்கே ஊதியத்தின் கணிசமான பகுதி செல்லும் நிலை சேமிப்பு மற்றும் முதலீட்டை பாதிக்கிறது. மேலும், நுகர்வு கடன் பெறும் பழக்கம் இருப்பதால், கேட்ஜெட், திருமணம், பயணம் என எல்லாவற்றுக்கும் கடன் வசதியை நாடுவது மாதத்தவணை சுமையை மேலும் அதிகரிக்கவே செய்யும். எதிர்பாராத நெருக்கடி அல்லது மருத்துவ செலவு நிலையை மேலும் மோசமாக்கலாம். எனவே, நடுத்தர குடும்பத்தினர் கடன் சுமையில் கவனமாக இருப்பது அவசியம் என்கின்றனர். செலவுகளை கண்காணிப்பதோடு, அவசரகால நிதிக்காக மாதம் சிறு தொகையை சேமிக்கும் வழக்கம் அவசியம். கடனை நாடுவதை குறைத்து, சேமிப்பு, முதலீட்டை அதிகரிக்கும் வழிகளை கண்டறிய வேண்டும்.