உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / டெல்டாவில் வேளாண் தொழில் வழித்தடம் கண்காணிப்பு நிறுவன தேர்வு பணி துவக்கம்

டெல்டாவில் வேளாண் தொழில் வழித்தடம் கண்காணிப்பு நிறுவன தேர்வு பணி துவக்கம்

சென்னை:தஞ்சை உட்பட டெல்டா மாவட்டங்களில் வேளாண் சார்ந்த புதிய தொழில்கள் துவக்குவதை ஊக்குவிக்க, 1,170 கோடி ரூபாய் செலவில் வேளாண் தொழில் பெருவழித்தடம் அமைக்கப்பட உள்ளது. அத்திட்ட பணிகளை துவக்குவதன் அடையாளமாக, கண்காணிப்பு நிறுவன தேர்வு பணியை, தமிழக அரசின் உணவு பதப்படுத்துதல் நிறுவனம் துவக்கியுள்ளது.

புதிய தொழிற்பேட்டை

தமிழகத்தில் தஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் தான் நெல் உள்ளிட்ட வேளாண் சாகுபடி அதிகம் நடக்கிறது. அம்மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அரசு அறிவித்துள்ளது. இதைத்தொடர்ந்து, தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை, நாகை, திருச்சி ஆகிய ஐந்து மாவட்டங்களை உள்ளடக்கிய பகுதிகளில், 1,070 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் வேளாண் தொழில் பெருவழித்தடம் அமைக்க தமிழக அரசு சமீபத்தில் ஒப்புதல் அளித்தது. இத்திட்டத்தை செயல்படுத்தும் பொறுப்பு, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் துறையின் கீழ் இயங்கும் தமிழக உணவு பதப்படுத்துதல் மற்றும் வேளாண் ஏற்றுமதி மேம்பாட்டு நிறுவனத்திடம் வழங்கப்பட்டுள்ளது. இத்திட்ட நிதியில், 195 கோடி ரூபாய் அளவுக்கு வேளாண், உணவு பதப்படுத்துதல் சார்ந்த தொழில் துவங்கும் நிறுவனங்களுக்கு, மானியத்துடன் கூடிய கடன் வழங்கப்பட உள்ளது. மேலும், குறு, சிறு தொழில் நிறுவனங்கள் பயன் பெற இயந்திரம், தளவாடங்களை உள்ளடக்கிய பொது வசதி மையங்கள், 130 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும். 'சிட்கோ' எனப்படும் சிறு தொழில் வளர்ச்சி நிறுவனம், தொழில் வழித்தடம் அமைய உள்ள ஐந்து மாவட்டங்களிலும் தலா ஒரு புதிய தொழிற்பேட்டை அமைக்கப்பட உள்ளது. இது தவிர, தஞ்சையில் பல்வேறு நிறுவனங்கள் தொழில் துவக்க உணவு பூங்கா ஏற்படுத்தப்படுகிறது.குளிர்பதன கிடங்குகள், ஆலையில் இருந்து விரைவாக பொருட்களை எடுத்துச் செல்லும் வகையில் சாலை உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளன.நடப்பு நிதியாண்டில் இருந்து, 2027 - 28க்குள் வேளாண் தொழில் வழித்தட பணிகளை முடிக்க கால அவகாசம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. எனவே, ஒவ்வொரு பணிகளையும் விரைந்து துவக்க, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை ஈடுபட்டுள்ளது.

உள்கட்டமைப்பு வசதி

இது குறித்து, குறு, சிறு, நடுத்தர தொழில் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:வேளாண் தொழில் வழித்தட திட்டப் பணிகளை ஒரு கண்காணிப்பு பிரிவு வாயிலாக கண்காணித்து, அவற்றின் நிலை குறித்து தொடர்ந்து தகவல் தெரிவிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்காக, 1.68 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.எனவே, ஐந்து பேர் அடங்கிய கண்காணிப்பு பிரிவு பணிகளை மேற்கொள்ளும் ஒப்பந்த நிறுவன தேர்வு பணி துவங்கியுள்ளது. இதைத்தொடர்ந்து, புதிய தொழில் துவங்க மானியத்துடன் கடன் வழங்குவது, உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தும் பணி மேற்கொள்ளப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ