பணவீக்கத்தை எதிர்கொள்ள உதவும் முதலீடு வழிகள்
முதலீடு மூலம் கிடைக்கும் பலன் பணவீக்கத்தை வெல்லும் வகையில் இருக்க வேண்டும் என்றாலும், இடர்களையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.முதலீடு வாய்ப்புகளை தேர்வு செய்யும் போது, பல்வேறு அம்சங்களை பரிசீலித்தாலும், பணவீக்கத்தின் தாக்கத்தை கவனத்தில் கொள்ளாதது பலரும் செய்யும் தவறாக இருக்கிறது. பணவீக்கம் வாங்கும் சக்தியை குறைப்பதால் முதலீட்டின் பலனையும் குறைக்கிறது. எனவே, முதலீட்டின் பலனை கணக்கிடும் போது, அதில் பணவீக்கத்தையும் சேர்த்துக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது. பண வீக்கத்தின் தாக்கத்தை கழித்து விட்டு வருவதே உண்மையான பலனாக பார்க்கப்பட வேண்டும். பாரம்பரிய வாய்ப்புகள்
மேலும், முதலீடு மீதான வரிவிதிப்பின் தாக்கத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டும். பணவீக்கம் மற்றும் வரி விதிப்பு ஆகியவற்றை சேர்த்து கணக்கிடும் போது, பாரம்பரியமான முதலீடு வாய்ப்புகள் அளிக்க கூடிய பலன் குறைவாக இருக்கலாம். இதன் காரணமாகவே நிதி திட்ட மிடலின் போது பணவீக்கத்தை தாக்கத்தையும் கணக்கிட சொல்கின்றனர். பணவீக்கத்தின் தாக்கத்தை மிஞ்சும் வகையில் முதலீட்டின் பலன் இருக்க வேண்டும். பணவீக்கத்தை வெல்ல அதிக பலன் அளிக்கும் முதலீடுகளை நாட வேண்டும் என புரிந்து கொண்டாலும், இது அத்தனை எளிதல்ல. ஏனெனில், முதலீடு அளிக்கும் பலன்கள் என்பது இடர் அம்சம் சார்ந்ததாகவும் இருக்கிறது. அதிக பலன் அளிக்கும் முதலீடுகள் இடர் அதிகம் கொண்டதாகவும் அமைந்திருக்கின்றன. அதே நேரத்தில் பாரம்பரிய முதலீடு வாய்ப்புகள் பாதுகாப்பு அதிகம் கொண்டவையாகவும் கருதப்படுகின்றன. இடர் குறைந்த வாய்ப்புகள்
முதலீடு பாதுகாப்பானதாகவும் இருக்க வேண்டும், அதிக பலனும் அளிக்க வேண்டும் என நினைத்தால், இடர் அம்சங்களை சரியாக நிர்வகிக்க வேண்டும். அந்த வகையில், குறைந்த இடர் கொண்ட, ஓரளவு அதிக பலன் அளிக்கும் முதலீடு வாய்ப்பு களை நாடுவது பொருத்தமானதாக இருக்கும். பரவலாக பலரும் நாடும் வைப்பு நிதிகளையே எடுத்துக்கொண்டால், வர்த்தக வைப்பு நிதி அல்லது சிறு வங்கிகள் வைப்பு நிதி அதிக வட்டி பலன் அளிப்பவை. அதற்கேற்ப இடர் அம்சம் கொண்டவை. இதை சமாளிக்க, வைப்பு நிதிகளில் மொத்தமாக முதலீடு செய்வதற்கு பதிலாக, தொகையை பிரித்து பல்வேறு கால அளவுகளில் முதலீடு செய்யலாம். இப்படி ஏணிப்படி முறையில் முதலீடு செய்வதன் மூலம், வட்டி விகித சுழற்சிக்கு ஏற்ப அதிக வட்டி விகித பலனையும் பெறலாம். வைப்பு நிதி தவிர, ரிசர்வ் வங்கி வெளியீடும் மாறும் வட்டி விகித சேமிப்பு பத்திரங்களும் நல்ல வாய்ப்பாக அமையும். வட்டி விகித போக்கிற்கு ஏற்ப பலன் அளிக்கும் இந்த பத்திரங்கள் தற்போது, 8.05 சதவீத பலன் அளிக்கின்றன. வைப்பு நிதி பலனை விட இது அதிகம் என்பதோடு அரசின் பாதுகாப்பு கொண்டவை. இதே போல தங்க சேமிப்பு பத்திரங்களை நாடலாம். புதிய தங்க பத்திரங்கள் வெளியிடப்படவில்லை என்றாலும், இரண்டாம் சந்தையில் பரிவர்த்தனை செய்யப்படும் பத்திரங்களை நாடலாம். மியூச்சுவல் பண்ட் ரகங்களில் ஒன்றான கடன்சார் நிதிகளையும் பரிசீலிக்கலாம். இவை பொதுவாக வைப்பு நிதியை விட பலன் அளிக்க வல்லவை. நீண்ட கால நோக்கில் பலன்பெற சமபங்கு நிதிகளில் எஸ்.ஐ.பி., முறையில் முதலீடு செய்யலாம்.