சென்னை: திருவள்ளூர் மாவட்டம், மப்பேட்டில், 1,423 கோடி ரூபாய் திட்ட செலவில், பல வகை கிடங்குகளை உள்ளடக்கிய சென்னை பல்முனைய சரக்கு போக்குவரத்து பூங்கா அமைக்கப்பட உள்ளது. முதல் கட்ட கட்டுமான பணிகளை மேற்கொள்ள தமிழக அரசு, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்துக்கு, 60 ஏக்கர் நிலம் வழங்கியுள்ளது.சென்னையில், சென்னை துறைமுகம்; திருவள்ளூரில் காமராஜர், காட்டுப்பள்ளி துறைமுகங்கள் உள்ளன. அவற்றின் வாயிலாக, தமிழகத்தின் பல மாவட்டங்களில் செயல்படும் நிறுவனங்கள் ஏற்றுமதி, இறக்குமதி வர்த்தகத்தை மேற்கொள்கின்றன.திருவள்ளூர் மாவட்டம், மப்பேடு கிராமத்தில், 182 ஏக்கரில், பல்முனைய சரக்கு போக்குவரத்து பூங்கா அமைக்கப்பட உள்ளது. அங்கு, சேமிப்பு கிடங்கு, குளிர்ப்பதன கிடங்கு என, பல வகை கிடங்குகள், பேக்கேஜிங் மையங்கள் என, ஏற்றுமதி, இறக்குமதிக்கு தேவையான அனைத்து கட்டமைப்பு வசதிகளும் அதிநவீன தொழில்நுட்பத்தில் இடம்பெறும். சரக்குகள் அதிவேகமாக கையாளப்படும். அடிக்கல்
இதை, 'டிட்கோ' எனப்படும் தமிழக தொழில் வளர்ச்சி நிறுவனம், என்.எச்.எல்.எம்.எல்., எனப்படும் தேசிய நெடுஞ்சாலை சரக்கு போக்குவரத்து மேலாண்மை நிறுவனம், சென்னை துறைமுக பொறுப்பு கழகம், ரயில் விகாஸ் நிகாம் ஆகியவை இணைந்து, சென்னை எம்.எம்.எல்.பி., நிறுவனம் என்ற சிறப்பு நிறுவனம் வாயிலாக அமைக்கின்றன.திட்ட செலவு, 1,423 கோடி ரூபாய். டிட்கோ, தேசிய சரக்கு போக்குவரத்து மேலாண்மை நிறுவனம் இடையில், 2021 அக்டோபரில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இத்திட்டத்திற்கு, 2022 மே மாதம், பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். மப்பேட்டில், பல்முனைய சரக்கு போக்குவரத்து பூங்கா அமைக்கும் திட்டத்தை செயல்படுத்த, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் தேர்வு செய்யப்பட்டது. நிலம் கையகப்படுத்துவது, அரசு துறைகளின் அனுமதி உள்ளிட்ட காரணங்களால், பணிகள் துவங்கப்படாமல் இருந்தன.தற்போது அந்த பணிகள் முடிவடைந்ததை அடுத்து, முதல் கட்ட கட்டுமான பணிகளை மேற்கொள்ள கடந்த பிப்ரவயில், 60 ஏக்கர் நிலத்தை அரசு வழங்கியுள்ளது. இதுகுறித்து, தொழில் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:சென்னை பல்முனைய சரக்கு போக்குவரத்து பூங்காவில் ஏற்றுமதி, இறக்குமதி வர்த்தகத்திற்கு தேவையான அனைத்து கட்டமைப்பு வசதிகளும் நவீன தொழில்நுட்பத்தில் இருக்கும். ஒதுக்கீடு
இது, சென்னை, காமராஜர், காட்டுப்பள்ளி துறைமுகங்களை பயன்படுத்தும் உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் வர்த்தகர்களுக்கு, தடையற்ற போக்குவரத்துக்கு வழிவகுக்கும்.இந்த பூங்கா, மூன்று பகுதிகளாக செயல்படுத்தப்படும். நிலம் ஒதுக்கீடு எந்த இடையூறும் இன்றி ஒதுக்கப்பட வேண்டும். அதன்படி, முதல் கட்ட பணிகளுக்காக, 60 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. அங்கு இந்தாண்டு பணிகளை துவக்கி, இரு ஆண்டுகளுக்குள் முடிக்கப்படும். இதேபோன்ற பூங்கா, கோவையிலும் அமைக்கப்பட உள்ளது. இதற்காக சூளுரில், 200 ஏக்கர் அடையாளம் காணப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
சரக்கு போக்குவரத்து பூங்கா
மப்பேடு திருவள்ளூர் மாவட்டம் திட்ட செலவு ரூ.1,423 கோடிபூங்கா பரப்பு 182 ஏக்கர்வசதிகள்சேமிப்புக் கிடங்குகுளிர்பதனக் கிடங்குபேக்கேஜிங் மையங்கள்