ராமநாதபுரம், புதுக்கோட்டையில் பல்நோக்கு கடல்பாசி பூங்கா
சென்னை: ராமநாதபுரத்தில் கடல்பாசி பூங்கா அமைக்கும் பணி, 60 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக, மீன்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நாட்டில் முதன் முறையாக, கடல்பாசி பூங்கா அமைக்க, தமிழகத்தில், ராமநாதபுரம் மாவட்டம் வளமாவூரில், 296.50 ஏக்கரில் இடம் தேர்வு செய்யப்பட்டது. இங்கு வீரியமிக்க விதைப்பாசி உற்பத்தி செய்யப்பட உள்ளது. கட்டுமானப் பணிகள் 60 சதவீதம் நிறைவடைந்துள்ளன. புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை அடுத்த மங்கனுாரில், 186 ஏக்கர் இடம் தேர்வு செய்யப்பட்டது. இதை கையகப்படுத்துவதில் இருந்த சிக்கலால், பணிகள் துவங்குவதில் தாமதம் ஏற்பட்டது. தற்போது பிரச்னை தீர்க்கப்பட்டு, நிலம் கையகப்படுத்தப்பட்டு பணிகள் துவங்கி உள்ளன. அடுத்த ஆண்டு ஜூன் மாதத்திற்குள் பணிகளை முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இங்கு, கடல்பாசி உலர்த்தும் தளம் உள்ளிட்ட மதிப்பு கூட்டு பொருட்கள் தயாரிக்கப்பட உள்ளன. 10,700 பயனாளிகள் இது குறித்து, மீன்வளத்துறை அதிகாரிகள் கூறியதாவது: கடலோர மாவட்டங்களான துாத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர் மாவட்டங்களில், கடல்பாசி உற்பத்தி நடக்கிறது. அங்கு பயன்படுத்தப்படும் 'கப்பா பைகஸ்' எனும் கடல்பாசி, வீரியம் குறைந்து வருகிறது. அவற்றின் விளைச்சலை, ஐந்து முதல் எட்டு மடங்கு உயர்த்தும் நோக்கில், வீரியமிக்க கடல் பாசி உற்பத்தி செய்வதே திட்டத்தின் நோக்கம், இத்திட்டத்தில் நேரடியாக, 1,689 பேரும், மறைமுகமாக 9,000 பேரும் பயன்பெறுவர். இவ்வாறு அவர்கள் கூறினர்.