யூலிப் வரி விதிப்பில் புதிய மாற்றம்
யூனிட் சார்ந்த காப்பீடு பாலிசிகள் தொடர்பான வரி விதிப்பு முறையில், பொது பட்ஜெட்டில் முக்கிய மாற்றம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி, 2.5 லட்சம் ரூபாய்க்கு மேல் பிரீமியம் கொண்ட யூலிப் திட்டம் அளிக்கும் பலன், மூலதன ஆதாயமாக கருதப்படும்.வழக்கமான பாலிசிகள் போல அல்லாமல், யூலிப் பாலிசிகள் பிரீமியத்தின் பெரும் பகுதியை பங்கு சந்தை சார்ந்து முதலீடு செய்கின்றன. இதற்கு முன், யூலிப் திட்டங்கள் விலக்கப்படும் போது கிடைக்கும் பலன், இதர வருமானத்தின் கீழ் வகைப்படுத்தப்பட்டு, அவரவர் வருமான வரி வரம்பிற்கு ஏற்ப வரி விதிக்கப்பட்டது. யூலிப் பிரீமியம் 2.5 லட்சம் ரூபாய்க்கு கீழ் இருந்தால் வரி விலக்கு உண்டு. இந்த வரம்பிற்கு மேல் உள்ள பிரீமியம் மீதான பலன் தொடர்பான வரி விதிப்பில் குழப்பம் இருந்தது.தற்போது, 2.5 லட்சத்திற்கு மேல் பிரீமியம் கொண்ட யூலிப் திட்டம் அளிக்கும் பலன் மூலதன ஆதாயமாக கருதப்பட்டு, ஓராண்டுக்கு மேல் வைத்திருக்கும் போது, 12.5 சதவீதம் நீண்டகால மூலதன ஆதாய வரி பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் மாதம் முதல் இந்த முறை அமலுக்கு வருகிறது.