ஆன்லைனில் உணவு பொருட்கள் சப்ளை டெலிவரி நிறுவனங்களுக்கு கட்டுப்பாடு காலாவதி ஆவதற்கு 45 நாட்களாவது இருக்க வேண்டும்
புதுடில்லி:குறைந்தபட்சம் ஒன்றரை மாதத்துக்கு மேல் காலாவதி தேதி உள்ள உணவுப் பொருட்களை மட்டுமே டெலிவரி செய்வதை உறுதிப்படுத்துமாறு, ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனங்களை, இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையமான எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., வலியுறுத்தியுள்ளது. விரைவில் காலாவதியாகக்கூடிய மற்றும் காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்வதாக ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனங்கள் மீது புகார் எழுந்துள்ளது. எனவே, மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம், இந்நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியது.இந்நிலையில், இதுபற்றி விவாதிக்க எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ.,யின் தலைமை செயல் அதிகாரி கமலா வர்தன ராவ் தலைமையில் நேற்று கூட்டம் நடைபெற்றது.இதில், 200க்கும் மேற்பட்ட ஆன்லைன் டெலிவரி நிறுவனங்கள் மற்றும் தொழில் கூட்டமைப்புகள் பங்கேற்றன. காலாவதியாவதற்கு குறைந்தபட்சம் 45 நாட்களாவது இருக்கும் உணவுப் பொருட்களை மட்டுமே டெலிவரி செய்வதை உறுதிப்படுத்துமாறு அப்போது வலியுறுத்தப்பட்டது. மேலும், டெலிவரி ஊழியர்களுக்கு உணவுப் பாதுகாப்பு, சுகாதார நெறிமுறைகள் தொடர்பாக பயிற்சி அளிக்குமாறும்; அவ்வப்போது உடல்நல பரிசோதனை மேற்கொள்ளுமாறும் நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. குறிப்பிட்ட உணவுப் பொருட்களை சத்தானவை என்று வகைபடுத்தும்போது, எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ.,யின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றும் கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.