| ADDED : நவ 20, 2025 12:30 AM
மும்பை: பி.எப்., எனப்படும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் கட்டாயம் பதிவு செய்வதற்கான உச்ச வரம்பை, 15,000 ரூபாயிலிருந்து உயர்த்துவது குறித்து பரிசீலிக்க வேண்டும் என மத்திய நிதி சேவைகள் துறை செயலர் நாகராஜு தெரிவித்துள்ளார். தனியார் ஊழியர்கள், 15,000 ரூபாய்க்கு குறைவாக சம்பளம் பெறும்பட்சத்தில், அவர்கள் பி.எப்., திட்டத்தின் கீழ் பதிவு செய்ய வேண்டியது கட்டாயமாகும். அதற்கு மேல் ஊதியம் பெறுவோருக்கு அது விருப்ப தேர்வாக உள்ளது. இந்நிலையில், மும்பையில் நடைபெற்ற இந்திய தொழிற்கூட்டமைப்பின் மாநாட்டில் பங்கேற்று பேசிய நிதி சேவைகள் துறை செயலர், இந்த நடைமுறை குறித்து கேள்வி எழுப்பினார். அப்போது அவர் தெரிவித்ததாவது: தனியார் துறையில் 15,000 ரூபாய்க்கு அதிகமாக சம்பாதிக்கும் பலருக்கும் பென்ஷன் பாதுகாப்பு இல்லை. இது மிகவும் தவறானது. வயதான பின் இவர்கள் தங்கள் குழந்தைகளை சார்ந்திருக்க வேண்டிய நிலை ஏற்படும். எனவே, இவர்களுக்கான எதிர்கால பாதுகாப்பை உறுதி செய்வது குறித்து சிந்திக்க வேண்டும். பென்ஷன் திட்டங்களின் கீழ், அதிக எண்ணிக்கையிலான தொழிலாளர்கள் பயனடைய வேண்டும் என மத்திய அரசு, அடல் பென்ஷன் திட்டம், என்.பி.எஸ்., உட்பட பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆனால், பி.எப்., நடைமுறை அதற்கு நேர்மாறாக உள்ளது. அடல் பென்ஷன் யோஜனா திட்டத்தில் பதிவு செய்துள்ளவர்களின் எண்ணிக்கை 8.30 கோடியை எட்டியுள்ளது. இதில் 48 சதவீதம் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. முறைசாரா துறையில் பணியாற்றி வரும் தொழிலாளர்களுக்கு சமூக பாதுகாப்பு திட்டங்களை விரிவுபடுத்த தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு தெரிவித்தார்.