உருளைக்கிழங்கு ஏற்றுமதி; 3 ஆண்டுகளில் 450 சதவிகிதம் உயர்வு
புதுடில்லி: நம் நாட்டில் இருந்து, பதப்படுத்தப்பட்ட உருளைக்கிழங்கு ஏற்றுமதி வெகுவாக அதிகரித்துள்ளதாக, சர்வதேச வணிக ஆராய்ச்சி அமைப்பான ஜி.டி.ஆர்.ஐ., தெரிவித்துள்ளது.இது குறித்து அதன் அறிக்கை விபரம் வருமாறு: ஆசியாவின் மிக விரிவடைந்த நொறுக்குத்தீனி மற்றும் உணவு வினியோக தொடராக இந்தியா உருவெடுத்துள்ளது. நொறுக்கு தீனிக்கு தேவை அதிகரிப்பால் பதப்படுத்திய உருளை உள்ளிட்ட பொருட்கள் ஏற்றுமதி அதிகரித்து வருகிறது. குறிப்பாக, ஈரப்பதம் நீக்கப்பட்ட உருளை, உருளை துருவல், சிப்ஸ், உருளைக்கிழங்கு மாவு மற்றும் உடனடியாக உண்ணக்கூடிய பண்டங்களாக ஆசிய நாடுகளுக்கு அதிக ஏற்றுமதி நடக்கிறது.கடந்த 2022ல் இதன் ஏற்றுமதி, 100 கோடி ரூபாயாக இருந்தது. 2025ல் உருளை ஏற்றுமதி, கிட்டத்தட்ட 450 சதவீதம் அதிகரித்து 560 கோடி ரூபாயாகியுள்ளது. உடனடி நுாடுல்ஸ், ஸ்நாக்ஸ், துரித உணவக தேவைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதே இதற்கு காரணம்.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
வரவேற்புக்கு காரணம்
நிச்சயமற்ற காலநிலையால் ஐரோப்பிய நாடுகள், சீனாவில் உருளை விளைச்சலில் ஏற்பட்டுள்ள சரிவு, இந்திய உருளைக்கான கிராக்கியை அதிகரித்துள்ளது. மேலும், நிலையான சாகுபடி, அதிகரிக்கும் தரம், குறைந்த விலை ஆகியவை இந்திய உருளைக்கிழங்கை ஆசிய நாடுகள் விரும்ப காரணமாகியுள்ளன.