5 மாதங்களில் ராமநாதபுரம் கடற்பாசி உற்பத்தி பூங்கா
சென்னை:ராமநாதபுரம் மாவட்டம் வளமாவூரில், கடற்பாசி உற்பத்தி பூங்கா அமைக்கும் பணி நடந்து வரும் நிலையில், அடுத்த ஐந்து மாதங்களில் இது பயன்பாட்டிற்கு வரும் என, அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், மாநில அரசால் நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டு, ராமநாதபுரம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில், கடற்பாசி பூங்கா அமைக்கும் பணி நடந்து வருகிறது. 127 கோடி ரூபாய் மதிப்பீட்டில், இரண்டு கட்டமாக பணி நடக்கும் என, அரசு தெரிவித்து உள்ளது. இதற்கான நிதியை, மத்திய அரசு 60 சதவீதமும், மாநில அரசு 40 சதவீதமும் வழங்குகிறது.அதில் முதற்கட்டமாக, ராமநாதபுரம் அடுத்த வளமாவூரில், 296 ஏக்கரில், கடற்பாசி உற்பத்தி பூங்கா அமைக்கும் பணி துவங்கப்பட்டு, கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதுகுறித்து மீன்வளத்துறை அதிகாரி கூறியதாவது:இந்த பூங்காவில், கடற்பாசிகள் உற்பத்தி செய்யப்பட்டு, அதன் விதைப் பாசிகள், உற்பத்தியாளர்களுக்கு வழங்கப்படும். வெளிநாடுகளில் இருந்து, வீரிய விதைப்பாசி கொண்டு வந்து, அதை உற்பத்தி செய்து, விதைப் பாசி வழங்கும் திட்டமும் உள்ளது.மேலும், பயிற்சி வளாகம், ஆய்வகம், நீர் சோதனை மையம், நன்னீர் ஆக்கும் கூடம் ஆகிய அம்சங்கள் இதில் கட்டப்பட்டு வருகின்றன.இவ்வாறு அவர் கூறினார்.