குறைந்தது பணவீக்கம் நவம்பரில் 5.48 சதவிகிம்
புதுடில்லி:கடந்த அக்டோபர் மாதத்தில், சில்லரை விலை பணவீக்கம் 6.20 சதவீதம் என்ற 14 மாத உச்சத்தை எட்டிய நிலையில், நவம்பரில் அனைவரது எதிர்பார்ப்புக்கு ஏற்ப 5.48 சதவீதமாக குறைந்துள்ளது. பணவீக்கம் கிராமப்புறங்களில் 5.95 சதவீதமாக்வும்; நகர்ப்புறங்களில் 4.83 சதவீதமாகவும் இருந்தது. கடந்த அக்டோபரில் 10.87 சதவீதமாக இருந்த உணவுப் பிரிவு பணவீக்கம், நவம்பரில் 9.04 சதவீதமாகக் குறைந்தது, ஒட்டுமொத்த பணவீக்க விகிதம் குறைய முக்கிய காரணமாக அமைந்தது. நவம்பரில் குறிப்பிட்ட சில காய்கறிகள், பருப்பு வகைகள், சர்க்கரை, பழங்கள், முட்டை, பால், மசாலா பொருட்கள், போக்கு வரத்து மற்றும் தகவல் தொடர்பு ஆகிய பிரிவுகளில் பணவீக்கம் குறிப்பிடத்தக்க அளவு குறைந்தது. பூண்டு, உருளை, காலிபிளவர், முட்டைக்கோஸ் மற்றும் தேங்காய் எண்ணெய் ஆகியவற்றில் பணவீக்கம் அதிகரித்து காணப்பட்டது.பணவீக்கம் குறையத் துவங்கியுள்ளதால், ரிசர்வ் வங்கியின் பிப்ரவரி மாத பணக் கொள்கை கூட்டத்தில், ரெப்போ வட்டி விகிதம் குறைக்கப்படுவதற்கான வாய்ப்புள்ளதாக, பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
தொழில் துறை உற்பத்தி
அக்டோபரில் சரிவுநாட்டின் தொழில்துறை உற்பத்தி வளர்ச்சி, கடந்த அக்டோபர் மாதத்தில் 3.50 சதவீதமாக குறைந்துள்ளது. இது கடந்தாண்டு அக்டோபரில் 11.90 சதவீதமாக இருந்தது. எனினும், செப்டம்பர் மாதத்தின் 3.10 சதவீதத்துடன் ஒப்பிடுகையில், அக்டோபரில் வளர்ச்சி அதிகரித்துள்ளது. சுரங்கத்துறை, மின்சாரம் மற்றும் தயாரிப்பு துறைகளின் வளர்ச்சி சரிந்ததே ஒட்டுமொத்த வளர்ச்சி குறைய காரணமாக அமைந்தது.