உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / வர்த்தக துளிகள்

வர்த்தக துளிகள்

ஹீரோ மோட்டோகார்ப் உற்பத்தி நிறுத்தம்

வினியோக சீரமைப்புக்காக, ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம், தனது 4 ஆலைகளின் உற்பத்தியை, மூன்று நாட்கள் நிறுத்த உள்ளது. குறுகிய கால வினியோக சீரமைப்பை மேற்கொள்ள, வருகிற 17 முதல் 19ம் தேதி வரையிலான மூன்று நாட்கள், ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம், உற்பத்தியை நிறுத்துவதாக தெரிவித்துள்ளது. இந்த உற்பத்தி நிறுத்த காலகட்டத்தில் பராமரிப்பு, சேவை வசதிகளை மேம்படுத்துதல் மற்றும் தொழில்நுட்ப வசதிகளை வலுப்படுத்துதல் ஆகியவற்றின் வாயிலாக, நிறுவனத்தின் செயல்பாடுகளை மேலும் வலுப்படுத்த இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.1,800 கோடி பங்குகளை விட்டுக்கொடுத்த அதிகாரி

'பேடிஎம்'மின் தாய் நிறுவனமான 'ஒன்97 கம்யூனிகேஷன்ஸ்' நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரும், தலைமை செயல் அதிகாரியுமான விஜய் சேகர் சர்மா, தன் வசமுள்ள 2.1 கோடி பங்குகளை, தாமாக முன்வந்து ஒப்படைத்துள்ளார். ஊதிய தொகுப்பில், பொருந்தாத அளவில் பங்கு ஒதுக்கீடு நடைபெறுவது குறித்து, செபி விசாரணை நடத்த உள்ள நிலையில், சர்மா இந்த முடிவை எடுத்துள்ளார். கடந்த 2019ல் இ.எஸ்.ஓ.பி., எனப்படும் ஊழியர்களின் பங்கு விருப்பத் திட்டத்தின் கீழ், சர்மாவிற்கு வழங்கப்பட்ட பங்குகளில், 1,800 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை அவர் திரும்ப வழங்கியுள்ளார்.

ரூ.7,500 கோடி நிதி திரட்டும் ஐ.டி.எப்.சி., பர்ஸ்ட் வங்கி

'வார்பர்க் பின்கஸ் மற்றும் ஏ.டி.ஐ.ஏ.,' நிறுவனங்கள், ஐ.டி.எப்.சி., பர்ஸ்ட் வங்கியில் 7,500 கோடி ரூபாயை முதலீடு செய்ய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வார்பர்க் பின்கஸ் மற்றும் ஏ.டி.ஐ.ஏ., எனப்படும் அபுதாபி முதலீட்டு ஆணையத்தின் துணை நிறுவனங்களிடம் இருந்து 7,500 கோடி ரூபாய் வரை நிதி திரட்ட ஐ.டி.எப்.சி., பர்ஸ்ட் வங்கியின் நிர்வாகக்குழு ஒப்புதல் அளித்துள்ளது. உலகளாவிய வளர்ச்சி முதலீட்டாளரான வார்பர்க் பின்கசின் துணை நிறுவனமான 'கரண்ட் சீ' இன்வெஸ்ட்மென்ட்ஸ் பி.வி., 9.80 சதவீதம் பங்குகளுக்கு 4,876 கோடி ரூபாயை முதலீடு செய்யும். அதேவேளையில், ஏ.டி.ஐ.ஏ.,வின் உரிமையாளரான பிளாட்டினம் இன்விக்டஸ் 5.10 சதவீதம் பங்குகளுக்கு, கிட்டத்தட்ட 2,624 கோடி ரூபாயை முதலீடு செய்யும் என, வங்கி தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை