| ADDED : நவ 20, 2025 12:59 AM
ம ருத்துவ காப்பீட்டுக்கு செலுத்தும் பிரீமியம் கட்டணம் ஆண்டுதோறும் அதிகரித்து வருவதால், மக்களுக்கு சுமை கூடிக்கொண்டே போகிறது. மருத்துவமனை செலவுகள் உயர்வு மற்றும் காப்பீடு கோரிக்கைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு ஆகியவை இதற்கு முக்கிய காரணங்களாக உள்ளன. இந்த நிலையில், பிரீமியம் உயர்வைக் கட்டுப்படுத்த மத்திய அரசு காப்பீடு நிறுவனங்கள் மற்றும் மருத்துவமனை குழுக்களுடன் தீவிர பேச்சு நடத்தி வருகிறது. பிரீமியத்துக்கு உச்சவரம்பு நிர்ணயிப்பது, முகவர்களுக்கு வழங்கப்படும் அதிக கமிஷனை குறைப்பது, மேலும் கடுமையான விதிமுறைகளை கொண்டுவருவது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை அரசு பரிசீலித்து வருகிறது. தற்போது காப்பீடு முகவர்களுக்கு பிரீமியத்தில் 20 முதல் 35 சதவீதம் வரை கமிஷன் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது. மேலும், கிளெய்ம் செயல்முறைகளை டிஜிட்டல் மயமாக்கி எளிதாக்கும் முயற்சியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. காப்பீடு துறையில் கிளெய்ம் தொகையை குறைத்து வழங்குதல், கிளெய்ம் செயல்முறையில் தாமதம் போன்ற பல குறைபாடுகளை ஐஆர்டிஏ சுட்டிக்காட்டியுள்ளது. கடந்த வாரம் நிதியமைச்சக அதிகாரிகள் காப்பீடு மற்றும் மருத்துவமனை பிரதிநிதிகளை சந்தித்து, ஒன்றிணைந்து செலவைக் குறைக்கவும், வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கவும் வலியுறுத்தியுள்ளனர். இந்தியாவில், வரும் 2026ல், மருத்துவ பணவீக்கம் 11.50 சதவீதமாக உயரும் என கணிக்கப்பட்டு உள்ளது. இது உலகளாவிய சராசரி மருத்துவ பணவீக்கமான 9.80 சதவீதத்தை விட அதிகமாகும்.