வீட்டை காலி செய்யாத அதிகாரி ஓய்வூதிய பலனில் பணத்தை கழித்த அரசு 12 ஆண்டு சட்ட-போராட்டத்தில் நீதிமன்றத்தின் உத்தரவு
அதிகாரி ஒருவர் அரசு வழங்கிய வீட்டை காலி செய்யவில்லை என கூறி, அவருக்கு வழங்கப்பட்ட பணிக்கொடை மற்றும் ஓய்வூதிய பணத்தில் ஒரு தொகையை அரசு பிடித்துக் கொண்டு வழங்கியது. இதை எதிர்த்து நீதிமன்றத்துக்கு சென்ற அந்த அதிகாரி, ஆண்டுகள் சட்டப்போராட்டத்துக்கு பின் ஒரு வழியாக தனக்கான நீதியை பெற்றுள்ளார். மத்திய பிரதேச அரசில், 1980ல் உதவிப் பொறியாளராக பணியாற்றத் துவங்கிய குமார், 2013 ஜூன் 30 அன்று தலைமை பொது மேலாளராக ஓய்வு பெற்றார். ஆனால், அவருக்கான ஓய்வூதிய பலன் எதுவும் வழங்கப்படவில்லை. இதற்கிடையே ஓய்வு பெற்று இரண்டு ஆண்டுகள் கழித்தே, வீட்டைக் காலி செய்தார். இதன்பின், கடந்த 2016 பிப்ரவரியில் தான் அவருக்கு பணிக்கொடையும், ஓய்வூதியப் பணமும் கிடைத்தது. ஆனால், அதில் அவருக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. அரசுக் குடியிருப்பைக் காலி செய்யவில்லை என்று அபராத வாடகையாக 1.56 லட்சம் ரூபாய் கழிக்கப்பட்டிருந்தது. உயர் நீதிமன்றம் சென்ற குமார், தனக்கு உரிய காலத்தில் ஓய்வூதியமோ, பணிக்கொடையோ கிடைக்காததால், தன்னால், அரசு வீட்டை விட்டு வெளியேற முடியவில்லை என்று சொன்னார். அரசு அதன் தரப்பில் பல்வேறு வாதங்களை முன்வைத்தது. வழக்கின் அனைத்து அம்சங்களையும் ஆராய்ந்த ம.பி., உயர் நீதிமன்றம், பிடித்தம் செய்யப்பட்ட பணத்துக்கு 6 சதவீத வட்டி போட்டு, அவருக்குத் திரும்ப தர வேண்டும் என்று உத்தரவு போட்டது. ம.பி., அரசு, இதற்கு எதிராக உச்ச நீதிமன்றம் சென்றது. ஆனால் அங்கேயும், குமாருக்கு சாதகமாகவே தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றம் தெரிவித்த கருத்துகள் தான் இந்த வழக்கில் முக்கியமானவை. 'ஓய்வூதியம் மற்றும் பணிக்கொடை ஆகியவை, நீண்ட காலம் பணியாற்றுவதன் வாயிலாகப் பெறப்படும் சட்டப்பூர்வ உரிமைகள். அது அரசு அல்லது முதலாளியின் தாராள மனப்பான்மை வாயிலாக வழங்கப்படுவது அல்ல. எனவே, வரையறுக்கப்பட்ட சூழ்நிலைகளில் மட்டுமே அவற்றை நிறுத்தி வைக்க முடியும். மேலும், அரசு வீட்டைக் காலி செய்யாததற்கும், ஓய்வூதியப் பலன்கள் வழங்கப்படாததற்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை. இரண்டையும் முடிச்சு போட முடியாது.