அனைத்து நிதி சேவைகளுக்கும் ஒரே சம்மதம் பெறுவது சரியா?: எஸ்.பி.ஐ., நிர்வாக இயக்குநர் கவலை
ஒ ரு நிறுவனத்திலிருந்து மற்றொரு நிறுவனத்திற்கு நிதி தரவுகளை பகிர 'அக்கவுன்ட் அக்ரிகேட்டர்'ஆக செயல்படும் நிறுவனங்கள் பயன்படுத்தும் ஒரே சம்மத முறை குறித்து, 'ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா'வின் நிர்வாக இயக்குநர் அஸ்வினி குமார் திவாரி கவலை தெரிவித்து உள்ளார். ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் இயங்கும் 'போன்பே, என்.எஸ்.டி.எல்., ' போன்ற அக்கவுன்ட் அக்ரிகேட்டர் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களின் அனுமதியுடன் நிதி நிறுவனங்களுக்கு இடையே தரவுகளை பகிர உதவுகின்றன. கடன் வழங்குதல், முதலீட்டு மேலாண்மை, கணக்கு தொடங்குதல் போன்ற அனைத்து நிதிச் சேவைகளுக்கும் வாடிக்கையாளர்களிடம் ஒரே ஒரு சம்மதம் மட்டுமே பெறப்படுகிறது. இதில், தற்போது 22.50 கோடி பயனாளிகள் உள்ளனர். இந்நிலையில், அக்கவுன்ட் அக்ரிகேட்டர்களிடம் இருக்கும் ஒரே சம்மதம் தெரிவிக்கும் நடைமுறையில் உள்ள நுணுக்கமான விதிகளை படிக்காமலும், புரிந்துகொள்ளாமலும் வாடிக்கையாளர்கள் கையெழுத்திட்டு விடுவதாக திவாரி கவலை தெரிவித்து உள்ளார். தனியுரிமை சட்டங்கள் முக்கியத்துவம் பெறும் இக்காலத்தில், வாடிக்கையாளர்களுக்கு முழுமையான புரிதல் இல்லாதபோது, இதுபோன்ற அமைப்பு இந்தியாவில் எவ்வாறு செயல்படுகிறது என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். ஒரே சம்மதம் தெரிவிக்கும் நடைமுறையில் உள்ள நுணுக்கமான விதிகளை படிக்காமலும், புரிந்துகொள்ளாமலும், வாடிக்கையாளர்கள் கையெழுத்திட்டு விடுகின்றனர்