| ADDED : டிச 30, 2025 02:23 AM
சமீப நாட்களாக உச்சத்தில் இருந்த வெள்ளி விலை, நேற்று இந்தியாவின் மல்டி கமாட்டி சந்தையில், ஒரு மணி நேரத்திலேயே கிலோவுக்கு 21,000 ரூபாய் வீழ்ச்சியடைந்தது. நேற்றைய வர்த்தக துவக்கத்தில், வெள்ளி விலை 1 கிலோ 2.54 லட்சம் ரூபாய் என்ற வரலாற்று உச்சத்தை எட்டியது. வெள்ளி விலை கணிசமாக உயர்ந்து வரும் நிலையில், கமாடிட்டி சந்தையில் இதன் வர்த்தகமும் அதிக ஏற்ற இறக்கங்களுடனே காணப்படுகிறது. இந்நிலையில், சர்வதேச சந்தையில் 1 அவுன்ஸ் வெள்ளி 80 டாலரை தொட்ட நிலையில், 75 டாலராக சரிந்தது. இதையடுத்து, இந்திய கமாடிட்டி சந்தையிலும், ஒரு மணி நேரத்தில் கிலோவுக்கு 21,000 ரூபாய் வீழ்ச்சியடைந்தது. நடப்பாண்டில் மட்டும் வெள்ளி விலை 181 சதவீதம் உயர்ந்துள்ளது. இதன் காரணமாக, முதலீட்டாளர்கள் லாபத்தை பதிவு செய்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவை தவிர, உக்ரைன் --- ரஷ்யா போரை முடிவுக்கு கொண்டு வர, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி இடையேயான பேச்சில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. உலக அரசியலில் பதற்றம் குறையும்போது, பாதுகாப்பான முதலீடான தங்கம் மற்றும் வெள்ளியின் தேவையும் குறையும். இவையெல்லாம் ஒருபுறமிருந்தாலும், வெள்ளி விலை, அதன் நிஜ மதிப்பை விட மிக வேகமாக உயர்ந்ததாகவும், இந்த சரிவு எதிர்பார்த்த ஒன்று தான் எனவும் சந்தை வல்லுநர்கள் கூறுகின்றனர்.