வரி விலக்கு, அரசின் ஆதரவு, இடர் குறைந்த தன்மை உள்ளிட்ட அம்சங்கள், பி.பி.எப்., முதலீட்டை ஏற்றதாக மாற்றுகின்றனவருமான வரி செலுத்துபவர்களில் பெரும்பாலானோர், புதிய வரி விதிப்பு முறையை தேர்வு செய்துள்ளதாக தெரிய வந்துள்ளது. அண்மையில் வெளியான பொது பட்ஜெட்டில், புதிய வரி விதிப்பு முறையில் சலுகைகள் அறிவிக்கப்பட்டு, இந்த முறை மேலும் எளிதாக்கப்பட்டுள்ளது. வருமான வரி தாக்கல் செய்யும் முறையை, எளிதாக்குவதே நோக்கம் என, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும் தெரிவித்துள்ளார். ஏற்கனவே புதிய வரி விதிப்பு முறை கட்டாயமாக்கப்பட்டு, பழைய முறை தேர்வுக்குறியதாக உள்ளது. வரிவிலக்கு முதலீடு
பழைய வரி விதிப்பு முறையை விட, புதிய வரி விதிப்பு ஈர்ப்புடையதாக இருக்கும் என, பரவலாக கருதப்படுகிறது. அதிக வருமான பிரிவில் உள்ளவர்களுக்கு இது பலன் அளிக்கும் என்றும் கருதப்படுகிறது. இரண்டு முறைகளிலும் சாதக, பாதக அம்சங்கள் இருந்தாலும், பழைய முறையில் 80சி பிரிவின் கீழ், வரி விலக்கிற்கான முதலீடுகள் முக்கிய அம்சமாக அமைகின்றன. வருங்கால சேமநல நிதி, பொது சேமநல நிதி போன்றவை இதன் கீழ் வருகின்றன. புதிய வரி விதிப்பு முறையில், 80சி பிரிவின் கீழ் சலுகைகள் கோர முடியாது என்பதால், வரி விலக்கு முதலீடுகள் முக்கியம் இல்லை. எனினும், புதிய வரி விதிப்பு முறையை தேர்வு செய்தவர்களுக்கும், பி.பி.எப்., எனும் பொதுசேமநல நிதி ஏற்றதாக இருக்கும் என, வல்லுனர்கள் கூறுகின்றனர்.பி.பி.எப்., முதலீடு நீண்ட கால நோக்கிலானதாக அமைகிறது. ஓய்வுகால திட்டமிடலுக்கு ஏற்றது. எனவே, இந்த முதலீடு தகுந்த பலன் அளிக்கும் என்கின்றனர். மேலும் பி.பி.எப்., கணக்கிற்கு தற்போது, 7.1 சதவீத வட்டி அளிக்கப்படுகிறது. முதிர்வு காலத்தில் தொகையை விலக்கிக்கொள்ளும் போதும் வரி விலக்கு உண்டு. அரசின் திட்டம் என்பதால், இடர் அம்சம் மிக குறைவு. பதினைந்து ஆண்டு காலம் முதலீடு செய்ய வேண்டும். அதன் பின் விரும்பினால் நீட்டித்துக்கொள்ளலாம். குறிப்பிட்ட நிபந்தனைகளுடன் பகுதி அளவு பணத்தை விலக்கிக்கொள்ளும் வாய்ப்பும் உண்டு. இந்த அம்சங்கள் சாதகமானவையாக பார்க்கப்படுகின்றன. இளம் முதலீட்டாளர்கள்
ஓய்வுகால திட்டமிடலில் கைகொடுப்பதால், இந்த திட்டம் ஏற்றது என வலியுறுத்தப்படுகிறது. பதினைந்து ஆண்டு காலம் லாக் இன் வரம்பு கொண்டிருப்பது, பாதகமாக பார்க்கப்பட்டாலும், இந்த அம்சமே நீண்டகால நோக்கில் வலுசேர்க்க கூடியது என்கின்றனர். தேவை எனில் பகுதி விலக்கல் வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம். எனவே, தற்போதைய முதலீட்டாளர்கள் புதிய வரி விதிப்பு முறையை தேர்வு செய்தாலும், இந்த முதலீட்டை தொடர்வது நிதி இலக்குகளை அடைய உதவும். இளம் முதலீட்டாளர்கள் மத்தியில் பங்குச் சந்தை மற்றும் மியூச்சுவல் பண்டு உள்ளிட்ட முதலீடுகளை நாடும் பழக்கம் அதிகம் இருந்தாலும், இந்த பிரிவினருக்கும் பி.பி.எப்., முதலீடு ஏற்றது. இது முதலீடு ஒழுக்கத்தை அளித்து, நீண்டகால நோக்கில் சேமிப்பை உறுதி செய்கிறது. நிதி இலக்குகளுக்கு ஏற்ப மற்ற முதலீடுகளை மேற்கொண்ட பின், எஞ்சிய தொகையை இதில் முதலீடு செய்யலாம். ஆரம்பத்திலேயே முதலீட்டை துவக்குவதன் மூலம், நீண்டகால நோக்கில் நல்ல பலன் பெறும் வாய்ப்பும் இருக்கிறது.