உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பங்கு வர்த்தகம் / ரூ.11,000 கோடி வாரிசுரிமை தகராறு அம்மா -- மகன் இடையே முற்றும் மோதல்

ரூ.11,000 கோடி வாரிசுரிமை தகராறு அம்மா -- மகன் இடையே முற்றும் மோதல்

புதுடில்லி:சொத்து தகராறால், டில்லியின் பிரபல தொழிலதிபர் குடும்பத்தைச் சேர்ந்த அம்மாவுக்கும் மகனுக்கும் மோதல் முற்றி, அடிதடி வரை சென்றுள்ளது. கிட்டத்தட்ட 11,000 கோடி ரூபாய் மதிப்பிலான வாரிசு உரிமை தொடர்பாக, கடந்த ஐந்து ஆண்டுகளாக நடந்து வரும் மோதல், தற்போது கைகலப்பு வரை சென்றுள்ளது.'காட்ப்ரே பிலிப்ஸ் இந்தியா' நிறுவனம், நம் நாட்டில் புகையிலை தயாரிப்பில் முன்னணி வகித்து வருகிறது. இது 'மோடி என்டர்பிரைசஸ்' எனும் குழுமத்தின் கீழ் இயங்கி வருகிறது. இந்தியாவின் சிகரெட் தொழில் துறையில் முக்கிய பங்கு வகித்து வரும் இந்நிறுவனம், 'போர் ஸ்கொயர், ரெட் அண்டு ஒயிட், கேவாண்டர்ஸ், டிப்பர் மற்றும் நார்த் போல்' போன்ற பிரபலமான சிகரெட் பிராண்டுகளை விற்பனை செய்து வருகிறது. இதன் தலைவராக கே.கே.மோடி செயல்பட்டு வந்தார். இந்நிலையில், கடந்த 2019ம் ஆண்டு இவர் மரணமடைந்ததை அடுத்து, குடும்பத்தில் வாரிசுரிமை பிரச்னை எழுந்தது. இவருக்கு மூன்று வாரிசுகள் உள்ளனர். அதில் ஒருவர் ஐ.பி.எல்., சூதாட்ட புகாரில் சிக்கிய லலித் மோடி. மற்றொருவர் சமீர் மோடி. இவர் தான் காட்ப்ரே நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர். இந்நிலையில், சமீபத்தில் நடந்த காட்ப்ரே நிறுவனத்தின் இயக்குனர் குழு கூட்டத்தில் பங்கேற்க சமீர் மோடி, டில்லியிலுள்ள அலுவலகத்திற்கு சென்று உள்ளார். அப்போது தாயார் பினா மோடியின் தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரியும், சில இயக்குனர்களும் சேர்ந்து கூட்டத்தில் தன்னை பங்கேற்க விடாமல் தடுத்ததாகவும், அதை மீறி உள்ளே செல்ல முற்பட்ட போது தன்னை தள்ளி விட்டதாகவும் அவர் தெரிவித்தார். இந்த மோதலில் தனது ஆள்காட்டி விரல் உடைந்ததாக டில்லியின் சரிதா விஹார் காவல் நிலையத்தில் அவர் அளித்துள்ள புகாரில் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சமீர் மோடி தெரிவித்ததாவது:இயக்குனர் குழு கூட்டத்தில் நான் பங்கேற்க கூடாது என்பதற்காகவே, திட்டமிட்டு என்னை தாக்கியுள்ளனர். நிறுவனத்தில் உள்ள எனது பங்கை விற்க அழுத்தம் கொடுப்பதற்காக இவ்வாறு செய்துஉள்ளனர். நிறுவனத்தின் பங்கு செட்டில்மென்ட் தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், நான் எனது பங்குகளை விற்கப் போவதில்லை. என்னை இயக்குனர் குழுவிலிருந்து நீக்குவதற்கான முயற்சிகளும் நிறைவேறாது. இவ்வாறு தெரிவித்து உள்ளார். இடைத்தரகர் வாயிலாக சமீரின் பங்குகளை வாங்க அவரது தாயார் விருப்பம் தெரிவித்திருந்த நிலையில், தற்போது சமீர் அதற்கும் ஒப்புக் கொள்ளவில்லை. இந்நிலையில், சமீரின் இந்த குற்றச்சாட்டுகள் முற்றிலும் தவறானது என, காட்ப்ரே நிறுவனம் சார்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை