உண்மையான கடன் செயலிகளை கண்டறிவது எப்படி?
எளிதாக கடன் பெற உதவும் உடனடி கடன் செயலிகள் அதிகரித்திருப்பது போலவே, இந்த பிரிவில் மோசடியான போலி செயலிகளும் அதிகரித்துள்ளன. போலி கடன் செயலிகள் தொடர்பாக ரிசர்வ் வங்கி மற்றும் வல்லுனர்கள் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர். கடன் வழங்குவதற்காக தேவையை விடஅதிகமான தனிப்பட்ட தகவல்களை கேட்கும் அல்லது முன்கூட்டியே பணம் செலுத்தக் கோரும் செயலிகள் ஆபத்தானவையாக இருக்கலாம். உடனடி கடன் வசதியை நாடும் போது கவனம் தேவை. கடன் செயலி போலி அல்ல என்பதை உறுதி செய்வதற்கான வழிகளை பார்க்கலாம்.ரிசர்வ் வங்கி பதிவு:
செயலிகளை பரிசீலிக்கும் போது முதலில் கவனிக்க வேண்டியது, அந்த செயலி ரிசர்வ் வங்கியின் பதிவு பட்டியலில் இருக்கிறதா என்பதை தான். கடன் செயலிகள் அனைத்தும் ரிசர்வ் வங்கியில் பதிவு செய்திருக்க வேண்டும். இந்த செயலிகள் ரிசர்வ் வங்கி நெறிமுறைகளை பின்பற்றி செயல்பட வேண்டும்.நிபந்தனைகள்:@
@ கடனுக்கான விதிகள், நிபந்தனைகளை முழுமையாக அறிய வேண்டும். செயலியில் இந்த தகவல்கள் தெளிவாக இருக்க வேண்டும். மேலும், சேவை வழங்கும் நிறுவனத்தின் தொடர்பு முகவரியும் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். மோசடி செயலிகள் உண்மையான முகவரியை கொண்டிருக்காது; அலுவலகங்களும் இருக்காது.
தகவல்கள் விளக்கம்:
செயலியை தரவிறக்கம் செய்யும் போது பல்வேறு தகவல்களை சமர்ப்பிக்க வேண்டும். உண்மையான செயலிகள், தாங்கள் சேகரிக்கும் தகவல்களுக்கான காரணத்தை தெளிவாக குறிப்பிட்டிருக்கும். தேவையில்லாத தகவல்களை அளிப்பது பாதுகாப்பு இல்லாதது என்பதை உணர வேண்டும்.விமர்சனங்கள்:
கடன் செயலியை பயன்படுத்தும் முன், அது தொடர்பாக மற்ற பயனாளிகள் கருத்துக்களை தெரிந்து கொள்ள வேண்டும். இணையத்தில் இதற்கு பல வழிகள் இருக்கின்றன. பிளே ஸ்டோரிலேயே விமர்சனகருத்துக்களை படிக்கலாம். செயலிக்கான மதிப்பீட்டையும் கவனிக்க வேண்டும்.ஆலோசனை:
கடன் செயலிகளின் செயல்பாடு வெளிப்படையாக இருப்பது முக்கியம். விதிகள், நிபந்தனைகள் தெளிவாக இருக்க வேண்டும். உண்மையான செயலிகள் சட்ட நோக்கிலான தகவல்களை தெரிவித்திருக்கும். செயலியின் தன்மையை உறுதி செய்து கொள்ள முடியவில்லை எனில், தொழில் முறை ஆலோசனையை நாடுவது நல்லது.