சென்னையில் திறன் மையம் அமைக்கிறது ஜப்பான் நிறுவனம்
சென்னை: ஜப்பான் நாட்டைச் சேர்ந்த, சர்வதேச அளவில் முக்கிய வங்கிகளில் ஒன்றான சுமிடோமோ மிட்ஸுய் வங்கி, தகவல் தொழில்நுட்ப மேம்பாடு மற்றும் சர்வதேச வங்கி நடவடிக்கைகளுக்காக, சென்னை போரூரில் சர்வதேச திறன் மையத்தை அமைத்துள்ளது. அதன் இந்திய பிரிவு அதிகாரிகள், சென்னையில் விரிவாக்க மற்றும் வளர்ச்சி திட்டங்கள் குறித்து, தொழில் துறை அமைச்சர் ராஜா, வழிகாட்டி நிறுவன அதிகாரிகள் உடன் சமீபத்தில் ஆலோசனை நடத்தியுள்ளனர். இதன் வாயிலாக, சென்னையில் மற்றொரு சர்வதேச திறன் மையத்தை, சுமிடோமோ மிட்ஸுய் வங்கி அமைக்க முடிவு செய்துள்ளது. இதுகுறித்து, வழிகாட்டி நிறுவனத்தின், 'எக்ஸ்' தளத்தில், 'சர்வதேச வங்கிகள் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களின் தாயகமாகவும், சர்வதேச திறன் மையம் மற்றும் தகவல் தொழில்நுட்ப சூழலுக்கும் பெயர் பெற்ற சென்னைக்கு, சுமிடோமோ வங்கியை வரவேற்கிறோம். இந்த வங்கியின் விரிவாக்கத்திற்கு இந்தியாவில் சென்னை சரியான தளம்' என தெரிவிக்கப்பட்டு உள்ளது.